பிரதமர் நரேந்திர மோடி ரூ.1756 கோடி முதலீட்டில் 300 மெகாவாட் சூரிய மின் உற்பத்தி நிலையத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார்.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை ஊக்குவிப்பதற்கும், கரியமில வாயு உமிழ்வை முற்றிலுமாக தவிர்ப்பதை நோக்கி முன்னேறுவதற்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில், பிரதமர் நரேந்திர மோடி 300 மெகாவாட் சூரிய மின்உற்பத்தி ஆலைக்கு நாளை அடிக்கல் நாட்டுகிறார்.
நிலக்கரி அமைச்சகத்தின் கீழ் உள்ள முன்னணி நவரத்னா மத்திய பொதுத்துறை நிறுவனமான என்எல்சி இந்தியா நிறுவனம், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் மத்திய பொதுத்துறை நிறுவன திட்டத்தின் ஒரு பகுதியாக ராஜஸ்தானின் பிகானீர் மாவட்டத்தில் உள்ள பார்சிங்சரில் 300 மெகாவாட் சூரிய மின்சக்தித் திட்டத்தை நிறுவுகிறது.
அரசு நிறுவனங்களுக்கு குறைந்த விலையில் மின்சாரம் வழங்குவதை உறுதி செய்வதே இதன் நோக்கமாகும். நாட்டில் 1 ஜிகாவாட் சூரியமின் உற்பத்தி திறன் மைல்கல்லை எட்டிய முதலாவது மத்திய பொதுத்துறை நிறுவனம் என்எல்சிஐஎல் ஆகும்.
போட்டி ஏலம் மூலம் இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு முகமை அறிமுகப்படுத்திய மத்திய பொதுத்துறை நிறுவன திட்டத்தின் இரண்டாம் கட்டம்-III-ல் நிறுவனம் 300 மெகாவாட் சூரிய சக்தி திட்ட திறனைப் பெற்றுள்ளது.
உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் பார்சிங்சர் அனல் மின் நிலையத்தின் மின் பரிமாற்ற வழிகள் மூலம் அனுப்பப்படும், இது ஆண்டுதோறும் சுமார் 750 மில்லியன் யூனிட் பசுமை மின்சாரத்தை உற்பத்தி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது வாழ்நாளில் கரியமில வாயு உமிழ்வில் சுமார் 18,000 டன் அளவிற்கு ஈடுசெய்கிறது.
ராஜஸ்தான் உர்ஜா விகாஸ் நிகாம் நிறுவனத்துடன் அடுத்த 25 ஆண்டுகளுக்கு ஒரு யூனிட்டுக்கு ரூ.2.52 என்ற கட்டணத்தில் மின் பயன்பாட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்த திட்டம் 2024செப்டம்பர் மாதத்திற்குள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் சுமார் 600 நபர்களுக்கு மறைமுகமாகவும், செயல்பாடுகள் மற்றும் பராமரிப்பு கட்டத்தின் போது 100 பணியாளர்களுக்கும் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் திறன் கொண்டது. மேலும், இந்த திட்டம் ராஜஸ்தான் மாநிலம் அதன் புதுப்பிக்கத்தக்க கொள்முதல் கடமையை நிறைவேற்ற உதவும், அதே நேரத்தில் கரியமில வாயு உமிழ்வை தவிர்ப்பதற்கான நாட்டின் முயற்சிக்கு பங்களிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.