வெளிநாடு வாழ் இந்தியர்கள் (என்ஆர்ஐக்கள்) மற்றும் இந்தியக் குடிமக்கள் இடையே அதிகரித்து வரும் மோசடித் திருமணங்கள் குறித்து கவலை தெரிவித்துள்ள சட்ட ஆணையம், அத்தகைய திருமணங்களை பதிவு செய்வதை கட்டாயமாக்க சட்ட கமிஷன் பரிந்துரைத்துள்ளது.
இது தொடர்பாக, மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகத்திடம், நீதிபதி ரித்து ராஜ் தலைமையிலான சட்ட கமிஷன் அளித்த பரிந்துரையில் கூறப்பட்டுள்ளதாவது:
இந்த திருமணங்கள் ஏமாற்றும் வகையில் மாறி, குறிப்பாக பெண்களை ஆபத்தான சூழ்நிலையில் தள்ளும் முறை அதிகரித்து வருவதை பல அறிக்கைகள் எடுத்துக்காட்டுகின்றன. இதனால், இந்திய குடிமக்கள் – வெளிநாடு வாழ் இந்தியர்கள் இடையிலான திருமணத்தை இந்தியாவில் பதிவு செய்வதை கட்டாயம் ஆக்க வேண்டும்.
இந்தியாவில் என்ஆர்ஐ /ஓசிஐ மற்றும் இந்திய குடிமக்கள் இடையே நடக்கும் அனைத்து திருமணங்களையும் கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும் என்று சட்ட ஆணையம் முன்மொழிந்துள்ளது.
விவாகரத்து, வாழ்க்கைத் துணையை பராமரித்தல், குழந்தைகளின் பராமரிப்பு, சம்மன், வாரண்டு அல்லது நீதித்துறை ஆவணங்களை வழங்குவதற்கான வழிமுறைகள் தொடர்பாக பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
கூடுதலாக, பாஸ்போர்ட் சட்டம், 1967 இல் திருத்தங்களை அறிமுகப்படுத்த ஆணையம் பரிந்துரைத்தது. தங்களது திருமண நிலையை அறிவிக்க வேண்டும் என்றும், வாழ்க்கைத் துணைவரின் பாஸ்போர்ட் எண்ணை இணைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.