தென்காசி வழியாக நாள்தோறும் ஆயிரக்கணக்கான கனரக ராட்சத வாகனங்களில் கனிம வளங்கள் கொண்டு செல்வதைத் தடுக்கும் வகையில் நாள்தோறும் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
தென்காசி மாவட்டம் தமிழகக் கேரள எல்லை புளியரை சோதனை சாவடியில் அதிக அளவு கனிம வளங்களை ஏற்றிச் செல்வதாக எழுந்த புகாரின் பேரில், தென்காசி மாவட்டம் புளியரை சோதனை சாவடியில் கனிம வளங்கள் கூடுதலாக ஏற்றிச் செல்லும் வாகனங்களைத் தடுக்க சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.
இதனிடையே, கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர், தனது தொகுதியான தமிழகக் கேரள எல்லை புளியரை வழியாகக் கேரளாவுக்குக் கனிம வளங்கள் அதிக அளவில் ஏத்தி செல்வதாகவும், சட்டசபையில் கனிமவளங்கள் கடத்தப்படுவது குறித்துக் கேள்வி எழுப்பினார்.
தென்காசி புளியரை சோதனை சாவடி வழியாகக் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே கனிம வள வாகனங்கள் அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அதிகாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.
இந்த நிலையில், தென்காசி மாவட்டத்தில் பள்ளிக்கு மாணவர்கள் வந்து செல்லும் நேரத்தில் அதிக அளவு கனிம வளங்களை ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்கள் செல்கிறது. இதனால், மாணவர்களின் பாதுகாப்புக் கேள்விக்குறியாகிறது. மாணவர்கள் சாலையில் பயந்து கொண்டே செல்ல வேண்டி உள்ளது. மேலும், அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. எனவே, மாணவர்கள் பள்ளி செல்லும் நேரத்தில் கனரக வாகனங்களுக்குத் தடை விதிக்க வேண்டும் என சமூக ஆர்வலர் ஒருவர் பொதுநல வழக்குத் தொடர்ந்தார்.
ஆனால், பொதுநல வழக்கிற்கான போதிய ஆதாரங்களும், ஆவணங்களும் தாக்கல் செய்யாததால் ரூ.25,000 அபராதம் விதித்து வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.