தமிழக பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, தமிழகம் முழுவதும் “என் மண் என் மக்கள்” பயணம் மேற்கொண்டு வருகிறார். அண்மையில் ராணிப்பேட்டை சட்டமன்றத் தொகுதியில் நடைபயணம் மேற்கொண்டபோது, தமிழகக் கைத்தறித் துறை அமைச்சர் காந்தி மீது ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
குறிப்பாக, இலவச வேட்டி சேலை வங்கும் திட்டத்தில் ஊழல் செய்ததாகக் குற்றம் சாட்டினார். அத்தோடு நிற்காமல், அது தொடர்பான புகாரை ஆதாரங்களுடன், தமிழக அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநர் அபய் குமார் சிங்கிடம் புகாராகவே கொடுத்துள்ளார்.
அதில், ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையின் போது ரேஷன் கார்டுதாரர்களுக்கு இலவச வேட்டி, சேலைகள் தமிழக அரசு வழங்கி வருகிறது. இதனைக் கைத்தறி மற்றும் துணிநூல் துறை செயல்படுத்தி வருகிறது. இந்த ஆண்டு மட்டும் 1.68 கோடி வேட்டி, 1.68 கோடி புடவைகள் தயாரிக்கத் திமுக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஜவுளி ஆராய்ச்சி மற்றும் சோதனைக்கான புகழ்பெற்ற மற்றும் NABL அங்கீகாரம் பெற்ற ஆய்வகங்களில் ஒன்றான தென்னிந்திய டெக்ஸ்டைல் ரிசர்ச் அசோசியேஷனில் சோதனைக்காக, இலவச வேட்டிகளில் ஒன்றை வழங்கினோம். அதில், வார்ப்பில் 22% மட்டுமே பருத்தியால் ஆனது என்றும், 68% வார் பாலியஸ்டரால் ஆனது என்றும் தெரிவித்துள்ளது.
கடந்த 2003 -ம் ஆண்டு அரசாணையின்படி, வேட்டியில் வெஃப்ட் பகுதி நெய்யப் பாலியஸ்டர் நூலை பயன்படுத்தலாம். ஆனால், வார் பகுதியை நெய்யக் கடந்த ஆண்டு வரை 100% பருத்தி நூல் தான் பயன்படுத்தப்பட்டது.
ஆனால், இந்த ஆண்டு, வார் பகுதி நெய்யவும், விலை குறைவான பாலியஸ்டர் நூலை பயன்படுத்தியிருக்கிறார்கள். ஒரு கிலோ ரூபாய் 320 வரை விற்கப்படும் பருத்தி நூலைப் பயன்படுத்தாமல், வேண்டுமென்றே, அதில் பாதி விலையான ரூ.160-க்கு கிடைக்கும் பாலியஸ்டர் நூலில் வார் பகுதியை நெய்துள்ளார்கள்.
அத்துடன், கைத்தறி வேட்டியின் வார்ப்புக்கு 60 sK கோன் நூலையும், பவர்லூம் வேட்டிக்கு 40 sK கோனையும் பயன்படுத்த வேண்டும். குறிப்பாக, வார்ப்புக்கு பருத்தியை மட்டுமே பயன்படுத்த வேண்டும், பாலியஸ்டரை பயன்படுத்தக் கூடாது.
அந்த வகையில், ஒரு வேட்டியில், 78% பாலியஸ்டர் நூலைப் பயன்படுத்தி உள்ளனர். பருத்தி வெறும் 22 சதவீதம் மட்டுமே இருப்பது தெரியவந்துள்ளது. உற்பத்தி செலவைக் குறைத்துவிட்டு, பெரிய அளவில் ஊழல் செய்திருக்கிறார்கள்.
எனவே, அமைச்சர் காந்தி மீது, ஊழல் தடுப்பு சடத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தனது புகார் மீது நடவடிக்கை எடுக்காதபட்சத்தில், நீதிமன்றத்திற்குச் சென்று நீதி பெறவும் தயாராகி வருகிறார். இதனால், திமுக தலைமையும், அமைச்சர் காந்தியும் பதற்றத்தில் உள்ளனர்.