இந்திய மகளிர் அணி 3-2 என்ற கணக்கில் ஜப்பானை வீழ்த்தி, வரலாற்றில் முதல் முறையாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்து பதக்கத்தை உறுதி செய்துள்ளது.
ஆசிய அணிகள் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர் மலேசியாவில் உள்ள சிலாங்கூரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் போட்டிகள் நடைபெற்று வருகின்றனர்.
இதில் இந்திய மகளிர் அணி காலிறுதிச்சுற்றில் ஹாங்காங்குடன் விளையாடி 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது.
இந்த காலிறுதியில் ஒற்றையர் பிரிவில் பி.வி.சிந்து மற்றும் அஷ்மிதாவும், இரட்டையர் பிரிவில் அஷ்வினி – தனிஷா ஜோடியும் ஹாங்காங் அணியை வீழ்த்தியது.
இந்நிலையில் இதன் அரையிறுதி போட்டி இன்று நடைபெற்றது. இதில் இந்திய அணி ஜப்பானை 3-2 என்ற கணக்கில் தோற்கடித்து வரலாற்றில் முதல் முறையாக இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
இந்திய அணி இறுதிப் போட்டியில் தாய்லாந்து அணியுடன் விளையாடவுள்ளது. இந்த போட்டியின் ஒற்றையர் பிரிவில் விளையாடிய பி.வி.சிந்து, ஜப்பானின் அயா ஓஹோரியாவுடன் விளையாடினார்.
இதில் பி.வி.சிந்து 21-17, 22-20 என்ற செட் கணக்கில் ஜப்பான் வீராங்கனையிடம் தோல்வியடைந்தார். அப்போது இந்தியா 0-1 என்ற கணக்கில் பின்தங்கி இருந்தது.
அப்போது இரட்டையர் பிரிவில் இந்திய அணியின் ட்ரீசா – காயத்ரி, ஜப்பான் ஜோடியான மாட்சுயாமா-ஷிடா உடன் விளையாடியது.
இதில் 21-17, 16-21, 22-20 என்ற கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் 1-1 என்று இரு அணிகளும் சமநிலையில் இருந்தன.
அப்போது முன்னாள் உலக சாம்பியனான நோசோமி ஒகுஹாராவுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் இந்திய அணியின் அஷ்மிதா சலிஹா 21-17, 21-14 என்ற கணக்கில் வெற்றி பெற்று இந்தியாவை 2-1 என முன்னிலைப் படுத்தினார்.
பின்னர் நடைபெற்ற மற்றொரு இரட்டையர் பிரிவில் இந்திய அணியின் சிந்து – போனப்பா ஜோடி ஜப்பான் அணியின் மியாவுரா-சகுரமோட்டோ ஜோடியை எதிர்க்கொண்டது.
இதில் ஜப்பான் அணி 21-14, 21-11 என்ற செட் கணக்கில் இந்தியாவை வீழ்த்தியது. இதன் மூலம் இரு அணிகளும் 2-2 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தனர்.
பின்னர் வெற்றியை தீர்மானிக்கும் கடைசி சுற்று நடைபெற்றது. இதில் இந்திய அணியின் அன்மோல் கர்ப் ஜப்பானின் நிடாரா நட்சுகியை 21-14, 21-18 என்ற செட் கணக்கில் வீழ்த்தி இந்தியாவை 3-2 என்ற கணக்கில் முன்னிலை படுத்தி இறுதிப்போட்டிக்கு அழைத்து சென்றார்.
இதன் மூலம் இந்திய மகளிர் அணி 3-2 என்ற கணக்கில் ஜப்பானை வீழ்த்தி, வரலாற்றில் முதல் முறையாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்து பதக்கத்தை உறுதி செய்துள்ளது.