மதுரை பேரையூரைச் சேர்ந்த வாசுமதி என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், நான் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக பேரையூர் சூலப்புரம் பகுதியில் இ- சேவை மையம் நடத்தி வருகிறேன்.
இந்த இ-சேவை மையத்தை மறைக்கும் வகையில் சிலர் பிளக்ஸ் போர்டு வைத்துள்ளனர். இதை சிறிது நகற்றி மாற்றம் செய்ததற்காக, டி.கல்லுப்பட்டி காவல் நிலையத்தில் பொய் புகார் அளித்தனர்.
இது குறித்து காவல்துறை விசாரணை செய்த நிலையில், மீண்டும் இ- சேவை மையத்தை மறைக்கும் வகையில் பிளக்ஸ் போர்டு வைத்தனர். இது குறித்து கேள்வி எழுப்பியபோது, எனது மாமியார் மற்றும் மாமனாரை தாக்கியுள்ளனர். எனவே, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் தெரிவித்திருந்தார்.
இந்த மனு நீதிபதி சக்தி சுகுமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல்துறையினர் சட்டத்திற்கு உட்பட்டே செயல்பட வேண்டும் என்றும், இந்த விவாகரத்தில் மதுரை மாவட்ட கலெக்டர், எஸ்.பி. ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.