ஜல்லி மற்றும் எம்.சாண்ட் விலை உயர்வு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், பொது மக்கள் மிகவும் கவலை அடைந்துள்ளனர்.
கட்டுமான பணிக்கு, அத்தியாவசிய தேவையான கருங்கல் ஜல்லி, எம் சாண்ட் உள்ளிட்டவற்றின் விலை நாளுக்கு நாள் பன்மடங்கு அதிகரித்து வருகிறது. குறிப்பாக, ஜல்லி, எம்சாண்ட், கிரஷர் டஸ்ட் உள்ளிட்ட பொருட்களின் விலை மூன்று மடங்கு உயர்ந்துள்ளது.
இந்த விலை உயர்வுக்குப் பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். விலை உயர்வினால் அரசு கட்டடிப்பணிகள், சாலைப் பணிகள் தேங்கும் நிலை ஏற்படும். அதுமட்டுமல்லாமல் விலை உயர்வினால் வீடு கட்டும் நடுத்தர வர்க்க மக்களும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஆகவே கட்டுமான பொருட்களின் விலை ஏற்றத்தைக் கட்டுப்படுத்த உடனடியாக ஒழுங்குமுறை ஆணையம் அமைக்க வேண்டும். குவாரிகளை அதிக அளவில் திறக்க வேண்டும் என்றும், இந்த விவகாரத்தில் தி.மு.க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கட்டுமான சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக அகில இந்திய கட்டுமான சங்கம், தமிழ்நாடு நெடுஞ்சாலை ஒப்பந்ததாரர்கள் கூட்டமைப்பு, பொதுத்துறை ஒப்பந்ததாரர் கூட்டமைப்பு சார்பாக ஏற்கனவே தமிழக அரசிடம் வலியுறுத்தியுள்ளன. ஆனால், தி.மு.க அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், பொதுமக்கள் மற்றும் கட்டுமான சங்கங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.