2024-2025 நிதியாண்டுக்கான பொது பட்ஜெட்டை, தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பிப்ரவரி 19 -ம் தேதி தாக்கல் செய்ய உள்ளார்.
தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டு முதல் கூட்டம் கடந்த பிப்.12-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெற்றது. அப்போது, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் மற்றும் முதல்வர் ஸ்டாலின் பதிலுரை உள்ளிட்டவை 15-ம் தேதி வரை நடைபெறும் என முடிவு அறிவிக்கப்பட்டது.
அந்த வகையில், 13-ம் தேதி ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் தொடங்கியது. 14–ம் தேதியும் விவாதம் நடைபெற்றது. 15–ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பதில் உரையாற்றினார்.
இந்த நிலையில், தமிழத்தின் 2024-2025 நிதியாண்டுக்கான பொதுப் பட்ஜெட்டை, தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வரும் 19 -ம் தேதி தாக்கல் செய்ய உள்ளார்.
இதைத் தொடர்ந்து வரும் 20 -ம் தேதி வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் விவசாயப் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.
தொடர்ந்து பிப்ரவரி 21 -ம் தேதி சட்டப்பேரவை துணை மதிப்பீடுகளுக்கான கோரிக்கை முன்வைக்கப்படும். இதனையடுத்து, 2024-2025 நிதியாண்டுக்கான பொதுப் பட்ஜெட் மற்றும் விவசாயப் பட்ஜெட் ஆகிய இரண்டு குறித்த விவாதங்கள் இரண்டு அமர்வுகளாக நடைபெறும். இத்துடன் சட்டப்பரேவை கூட்டத் தொடர் நிறைவடைகிறது.