கட்டுமானத் துறையில் கழிவுகளை மறுசுழற்சி செய்தல் மற்றும் பயன்படுத்துதலில், சமீபத்தில் ஏற்பட்ட முன்னேற்றம் என்ற தலைப்பிலான தேசிய பயிலரங்கை டெல்லியில் மத்திய வீட்டுவசதி, நகர்ப்புற விவகாரங்கள், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தொடங்கி வைத்தார்.
பின்னர், இந்தியப் பொருளாதாரத்திற்கு கட்டுமானத் தொழிலின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். இதுகுறித்து மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கூறியதாவது,
இந்தியாவில் விரைவாக வளர்ந்து வரும் தொழில்களில் கட்டுமானத் துறையும் ஒன்றாகும். இது நாட்டின் இரண்டாவது பெரிய வேலைவாய்ப்பு அளிக்கும் துறை ஆகும். கட்டுமானத் துறையில் 2025-ஆம் ஆண்டில் உலகளவில் மூன்றாவது மிகப்பெரிய சந்தையாக இந்தியா இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. கட்டுமான சூழலை நாம் மிக விரைவாக உருவாக்கி வருகிறோம்.
2047-ஆம் ஆண்டுக்குள் இந்தியா வளர்ந்த நாடாக மாற வேண்டும் என்றால், உட்கட்டமைப்பு முக்கிய பங்கு வகிக்கும். தேசியத் தலைநகரில் மட்டும் நாளொன்றுக்கு 6,303 மெட்ரிக் டன் கட்டடக் கழிவுகள் உருவாகின்றன. இதில், சுமார் 78% கழிவுகள் ஒரு நாளைக்கு பதப்படுத்தப்படுகின்றன என்று கூறினார்.
நார்வே சின்டெஃப் உடன் இணைந்து மத்திய பொதுப்பணித்துறை ஏற்பாடு செய்திருந்த இந்த பயிலரங்கு, கட்டுமானத் துறையில் ஈடுபட்டுள்ள பங்கேற்பாளர்களுக்கு கட்டடக் கழிவுகளின் மறுசுழற்சி பயன்பாட்டை ஊக்குவிப்பதற்கான பல்வேறு அம்சங்களைப் பற்றி விவாதிக்க ஒரு வாய்ப்பை வழங்கியது.