மோட்டார் வாகனச் சட்டத்தின்படி, நெடுஞ்சாலைகளில் டிராக்டர் மற்றும் ட்ராலிகளை இயக்க முடியாது என்று பஞ்சாப் மற்றும் அரியானா உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
விவசாயிகளின் போராட்டம் தொடர்பாக பஞ்சாப் – அரியானா உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இந்த வழக்கு தலைமை நீதிபதி (பொறுப்பு) சந்த்வாலியா மற்றும் நீதிபதி லபிதா பானர்ஜி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, தலைமை நீதிபதி சந்த்வாலியா கூறும்போது, விவசாயிகள் அதிக அளவில் கூடுவதற்கு பஞ்சாப் அரசு அனுமதிக்கக் கூடாது. போராட்டம் நடத்த உரிமை உண்டு. ஆனால், அது கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டது.
மோட்டார் வாகனச் சட்டத்தின்படி நெடுஞ்சாலைகளில் டிராக்டர் ட்ராலிகளை இயக்க முடியாது. விவசாயிகள் பேருந்துகள் அல்லது பொதுப் போக்குவரத்து வசதிகளைப் பயன்படுத்தி டெல்லிக்கு செல்லலாம்.
மேலும், நீதிமன்ற விசாரணையின் போது, போராட்டம் நடத்திய விவசாயிகளுடன் அவர்களின் கோரிக்கைகள் தொடர்பாக நடத்தப்பட்ட பேச்சுவாத்தைகள் குறித்து மத்திய அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தது. இது குறித்து புதிய பிரமாணப் பத்திரத்தை சமர்ப்பிக்குமாறு மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை அடுத்து, விசாரணையை அடுத்த வாரத்துக்கு உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.