சமவேலைக்கு சமஊதியம் என்ற கோரிக்கையை முன்வைத்து, கடந்த 10 வருடங்களுக்கு மேலாக, இடைநிலை ஆசிரியர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
போராட்டம் தொடரும் போது அல்லது தேர்தல் நேரத்தில் எல்லாம், ஆசிரியர்களை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தி, உறுதியளிக்கும் அரசு அதிகாரிகள், பின்பு அவர்களைக் கண்டுகொள்வது கிடையாது.
இதனால், தங்களது கோரிக்கையை வென்றெடுக்க, இடைநிலை ஆசிரியர்கள் முடிவு செய்து, நேற்று முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
போராட்டக்காரர்கள் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளி கல்வித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உரிமை கேட்டு போராட்டத்தில் ஈடுபட்ட 350 ஆசிரியைகள் உள்ளிட்ட 800-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
இதேபோல, நேற்றும் போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். இன்றும் பலரை கைது செய்துள்ளனர்.
“எங்களை எத்தனை முறை கைது செய்தாலும், போராட்டம் தொடரும்” என இடைநிலை ஆசிரியர்கள் உறுதிபட அறிவித்துள்ளதால், என்ன செய்வது எனத் தெரியாமல் தி.மு.க அரசு விழி பிதுங்கி நிற்கிறது.