நீர்மின் திட்ட ஒப்பந்தத்தில் நடைபெற்ற ஊழல் தொடர்பாக ஜம்மு காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் இல்லம் உள்ளிட்ட 30 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
கடந்த 2018 ஆகஸ்ட் முதல் 2019 அக்டோபர் வரை ஜம்மு காஷ்மீர் ஆளுநராக பதவி வகித்தவர் சத்யபால் மாலிக். அப்போது, கிஷ்த்வார் மாவட்டம் செனாப் ஆற்றில் இருந்து 624 மெகா வாட் நீர்மின் உற்பத்திக்கான 2 கோப்புகளுக்கு ஒப்பந்தம் அளிக்க சிலர் ரூ.300 கோடி வரை லஞ்சம் அளிக்க முயன்றதாக அவர் குற்றம்சாட்டியிருந்தார்.
இதுதொடர்பாக அவர் லஞ்சம் பெற்றிருக்கலாம் என்ற அடிப்படையில், சத்யபால் சிங் இல்லத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை நடத்தினர். குர்கிராம், பாக்பத், டெல்லி ஆர்.கே.புரத்தில் உள்ள அவருக்கு சொந்தமான இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
மேலும் பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான், பீகார், உத்தரப்பிரதேசம், டெல்லி, மும்பை உள்ளிட்ட 30 இடங்களில் சோதனை நடைபெற்றது. இதே விவகாரம் தொடர்பாக சத்யபால் மாலிக்கிற்கு சொந்தமான 8 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் கடந்த மாதம் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.