மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் மனோகர் ஜோஷி மாரடைப்பு காரணமாக இன்று (பிப்ரவரி-23) காலமானார்.
மஹாராஷ்டிரா மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், சிவசேனா கட்சியின் மூத்தத் தலைவருமான மனோகர் ஜோஷி (வயது86) கடந்த 21ம் தேதி மாரடைப்பு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரது உடல்நிலை மோசமடைந்து இருப்பதாகவும், தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளித்து வருவதாகவும் நேற்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் இன்று அதிகாலை 3 மணியளவில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
மராட்டிய மாநிலம் சிவசேனா கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராக விளங்கியவர் மனோகர் ஜோஷி. மராட்டிய மாநிலம் ராய்கட் மாவட்டத்தில் உள்ள நந்தவி கிராமத்தில் 1937 டிசம்பர் இரண்டாம் தேதி மனோகர் ஜோஷி பிறந்தார்.
அரசியலில் ஏற்பட்ட ஈடுபாடு காரணமாக கட்சிப் பணிகளில் இறங்கிய மனோகர் ஜோஷி நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்தில் உள்ள அனைத்து அவைகளுக்கும் தேர்வாகியுள்ளார்.
1995 முதல் 1999 வரையிலான காலகட்டத்தில் மராட்டிய மாநிலத்தின் முதலமைச்சராகவும் பதவி வகித்தார். 1972 முதல் 1989 வரை மராட்டிய மாநில சட்ட மேலவை உறுப்பினராகவும் பதவி வகித்தார். 2002-2004 வரையிலான காலகட்டத்தில் மக்களவை சபாநாயகராகவும் பதவி வகித்தவர்.