கேரளாவில் உள்ள காயம்குளம் டூ ஆலப்புழா இடையே ஏராளமான அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், இன்று காலை அந்த வழியாகச் சென்ற அரசு பேருந்து ஒன்றில் திடீரெனப் புகை நாற்றம் வந்தது. இதனால், பேருந்து ஓட்டுநர் அனைவரையும் பேருந்தில் இருந்து சீக்கீரம் இறங்குமாறு கூறினார். இதனால், பதற்றம் அடைந்த பயணிகள், ஒருவரை ஒருவரை முண்டியடித்துக் கொண்டு பேருந்தில் இருந்து கீழே குதித்தனர்.
அப்போது, பேருந்தின் பின்பக்க டயரில் இருந்து திடீரெனத் தீ பற்றி எரிந்தது. இது தொடர்பாக, தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
தீ விபத்துக் குறித்துப் பேருந்து ஓட்டுநர் செய்தியாளர்களிடம் கூறுகையில், இன்ஜின் ஒலியில் மாற்றம் தெரிந்தது. இதனால், சந்தேகம் அடைந்து பேருந்தை சாலையின் ஓரமாக நிறுத்தினேன். அப்போது பின்பகுதியில் முதலில் புகை வெளியேறியது. பின்னர், தீ பற்றிக் கொண்டது.
இதனால், உடனே பேருந்தில் இருந்த அனைவரையும் இறங்க சொன்னேன். பேருந்தில் சுமார் 44 பயணிகள் இருந்தனர். அவர்களில் சுமார் 20 பேர் கல்லூரி மாணவர்கள். அனைவரும் காயமின்றித் தப்பிவிட்டனர் என்றார்.
தீ பிடித்த பேருந்தில் இருந்து பயணிகள் அனைவரும் உடனே இறக்கிவிட்டப்பட்டதால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது. இதனால், பேருந்து ஓட்டுநருக்கு பாராட்டு குவிந்து வருகிறது.