இமாச்சலப் பிரதேசத்தின் உனாவிலிருந்து சஹரன்பூருக்கு இயக்கப்படும் ரயில் இப்போது ஹரித்வார் வரை நீட்டிக்கப்படும் என்று தகவல் ஒலிபரப்புத்துறை மற்றும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறியதாவது, “ஹரித்வார் ஒரு முக்கிய ஆன்மீக தலமாகும். இமாச்சல பிரதேசத்திலிருந்து ஏராளமான மக்கள் புனித யாத்திரைக்காக ஹரித்வாருக்கு வருகை தருகிறார்கள். இமாச்சலப் பிரதேசத்திலிருந்து பயணிகள் நேரடியாக ரயிலில் ஹரித்வாருக்குச் செல்வதற்கு வசதியாக இருக்குமென்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அவர்களிடம் கோரிக்கை வைத்தேன்.
உனாவிலிருந்து சஹரன்பூர் வரை இயங்கி வந்த உனா ஹிமாச்சல்-சஹரன்பூர் புறநகர் மின்சார ரயிலின் விரிவாக்கத்திற்கு ரயில்வே அமைச்சர் ஒப்புதல் அளித்துள்ளார். இந்த ரயில் இப்போது உனாவிலிருந்து ஹரித்வார் வரை இயக்கப்படும். இது பயணிகளுக்கு நல்ல வசதியை வழங்குகிறது. எனவே, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்பகுதிக்கு நாட்டின் நான்காவது வந்தே பாரத் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி பரிசாக வழங்கினார். பாஜகவால்தான் இந்தியாவின் அதிநவீன ரயில் இப்போது இமாச்சல பிரதேசத்தில் இயக்கப்படுகிறது. ரயில்வே சேவைகளை விரிவுபடுத்துவதற்கும், புதிய ரயில்களை இயக்குவது முதல் தேவையான உட்கட்டமைப்பை உருவாக்குவது வரை இமாச்சல பிரதேசத்தில் எந்தவொரு இணைப்பு சிக்கல்களுக்கும் தீர்வு காண்பதற்கும் மோடி அரசு சிறப்பாக செயல்படுகிறது.
2023-24 நிதியாண்டில் இமாச்சலப் பிரதேசத்தில் ரயில்வே விரிவாக்கத்திற்காக 1,838 கோடி ரூபாய் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 2023-24 பட்ஜெட்டில் முக்கியத்துவம் வாய்ந்த பானுபாலி-பிலாஸ்பூர்-பெரி ரயில் பாதைக்காக 1,000 கோடி ரூபாயும், சண்டிகர்-பாடி ரயில் பாதைக்கு 450 கோடி ரூபாயும், நங்கல்-தல்வாரா ரயில் பாதைக்கு 452 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது. ரயில்வே விரிவாக்கத்திற்காக 1,838 கோடி ரூபாய் வழங்க ஒப்புதல் அளித்திருப்பது, 2009 முதல் 2014 வரையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் வழங்கப்பட்டதை விட 17 மடங்கு அதிகமாகும் என்று கூறினார்.