மகளிர் பிரீமியர் லீக் தொடரில் நேற்றையப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் உ.பி. வாரியர்ஸ் அணியை வீழ்த்தியது.
இந்தியாவில் பெண்களுக்கான மகளிர் பிரீமியர் லீக் ( WPL ) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், உ.பி. வாரியர்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் ஆகிய 5 அணிகள் பங்கேற்றுள்ளன.
இந்த தொடரில் இரண்டாவது போட்டி நேற்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – உ.பி. வாரியர்ஸ் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற உ.பி. அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்கள் இழப்பிற்கு 157 ரன்களை எடுத்தது.
பெங்களூரு அணியில் அதிகபட்சமாக ரிச்சா கோஷ் 62 ரன்களும், மேகனா 53 ரன்களும் எடுத்தனர். மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க பெங்களூரு அணி 6 விக்கெட்கள் இழப்பிற்கு 157 ரன்களை எடுத்தது. உ.பி. அணியில் ராஜேஸ்வரி 2 விக்கெட்களும், தீப்தி சர்மா, எக்லெஸ்டோன், தஹ்லியா, கிரேஸ் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர்.
இதனால் உ.பி. அணிக்கு 158 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதை தொடர்ந்து களமிறங்கிய உ.பி. அணி அடுத்தடுத்து விக்கெட்களை பறிகொடுத்தது. உபி வாரியர்ஸ் அணி 49 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்த நிலையில் கிரேஸ் ஹாரிஸ் மற்றும் ஸ்வேதா இணைந்து 50 ரன்களுக்கும் மேல் சேர்த்தனர்.
அதன் பின் விக்கெட்கள் சரியத் துவங்கின. பெங்களூர் அணியின் சோபனா ஆஷா அபாரமாக பந்து வீசி 5 விக்கெட்கள் வீழ்த்தினார். கடைசி ஓவரில் உபி அணியின் வெற்றிக்கு 11 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது மோலினேக்ஸ் பந்து வீசினார். முதல் நான்கு பந்துகளில் 2 ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றம் அளித்தனர் உபி அணியின் எக்செல்ஸ்டன் மற்றும் தீப்தி சர்மா.
ஐந்தாவது பந்தில் தீப்தி சர்மா ஒரு ஃபோர் அடித்தார். இதை அடுத்து கடைசி பந்தில் 5 ரன்கள் தேவை என்ற நிலையில், முந்தைய மும்பை இந்தியன்ஸ் போட்டி போல, கடைசி பந்தில் தீப்தி சிக்ஸ் அடித்து வெற்றி தேடிக் கொடுப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.
ஆனால், கடைசி பந்தில் 2 ரன்கள் மட்டுமே எடுத்தார் தீப்தி. இதை அடுத்து 2 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் அணி வெற்றி பெற்றது. ஆட்டநாயகி விருது 5 விக்கெட்களை வீழ்த்திய ஆர்.சி.பி அணியின் சோபானவுக்கு வழங்கப்பட்டது.