ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு வங்கதேசத்திற்கு வெங்காயம் ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
வங்கதேசத்துக்கு 24 மார்ச் 31ஆம் தேதி வரை வெங்காயம் ஏற்றுமதிக்கு தடை விதித்திருந்த நிலையில் தற்போது இந்த தடையை மத்திய அரசு நீக்கியுள்ளது. வங்கதேசம், மொரீஷியஸ், பஹ்ரைன், பூடான் ஆகிய நாடுகளுக்கு மார்ச் 31 வரை 54,760 டன் வெங்காயத்தை ஏற்றுமதி செய்ய வணிகர்களுக்கு அனுமதிவழங்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, வங்கதேசத்துக்கு 50,000 டன், மொரீஷியஸுக்கு 1,200 டன், பஹ்ரைனுக்கு 3,000 டன் மற்றும் பூடானுக்கு 560 டன் வெங்காயம் ஏற்றுமதி செய்ய இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சர்வதேச அளவில் வெங்காயத்தின் மிகப்பெரிய ஏற்றுமதியாளராக இந்தியா உள்ளது. இந்நிலையில், உள்நாட்டில் உற்பத்தி சரிவைத் தொடர்ந்து மூன்று மாதங்களில் உள்நாட்டு விலை அதிகரித்தது. இதையடுத்து 2024 மார்ச் 31ஆம் தேதி வரை வெங்காயம் ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்தது.
இந்நிலையில் வெங்காயம் மற்றும் சர்க்கரை உள்ளிட்ட உணவுப் பொருட்களின் ஏற்றுமதிக்கு இந்தியா விதித்துள்ள தடையில் இருந்து விலக்கு அளிக்குமாறு இந்திய தூதரகங்கள் மூலம் வங்கதேசம் கோரியதாக வெளியுறவு அமைச்சகம் (MEA) தெரிவித்ததை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வங்கதேசத்திற்கு 20,000 டன் வெங்காயம் மற்றும் 50,000 டன் சர்க்கரை ஏற்றுமதி செய்ய விலக்கு அளிக்கலாம் என்று MEA பரிந்துரைத்தாலும், உள்நாட்டு விநியோக கவலைகளுக்கு மத்தியில் சர்க்கரை ஏற்றுமதியை அரசாங்கம் அனுமதிக்கவில்லை.
இருப்பினும் வரவிருக்கும் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு வங்கதேசத்திற்கு வெங்காயம் தேவைப்படும் என்பதை கருத்தில் கொண்டு 50,000 டன் வெங்காயம் ஏற்றுமதி செய்வதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. வங்கதேசத்தில் ஒரு ஆண்டிற்கு சுமார் 2.5 மில்லியன் டன்கள் வெங்காயம் தேவைப்படுகிறது.