மத்திய பிரதேசம் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, மத்திய இணை அமைச்சர் டாக்டர் எல்.முருகன், இன்று முதல் முறையாக (ஞாயிற்றுக்கிழமை – பிப்ரவரி 25-ஆம் தேதி) மாலை 4.00 மணி அளவில் சென்னை விமான நிலையத்திற்கு வருகை தந்தார்.
அவருக்கு தமிழக பா.ஜ.க சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனை ஏற்றுக் கொண்ட மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர் பேசுகையில், தமிழகத்தில் உள்ள ஒருவருக்கு, இரண்டாவது முறையாக மத்திய பிரதேசத்தில் இருந்து வாய்ப்பு கொடுத்துள்ளார்கள்.
அதற்கு காரணம், தமிழர்களின் குரல் பாராளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும் என்பதற்காகவே, மத்திய பிரதேசத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்டு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, பாராளுமன்றத்தில் தமிழர்கள் இல்லாத குறையை போக்க பாரதப் பிரதமர் மோடி தீர்வு கண்டுள்ளார். ஏற்கனவே, இல.கணேசனுக்கு மத்திய பிரதேசத்தில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. எனவே, மத்திய பிரதேசத்திற்கும், தமிழகத்திற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
பாரத பிரதமர் மோடியின் சீரிய முயற்சியால், இன்று நம் நாடு உள்நாட்டு உற்பத்தியில் தன்னிறைவு பெற்றுள்ளது. நாட்டில் புதுமையான திட்டங்களால், தேசம் முன்னேற்றப்பாதையில் செல்கிறது. இன்று, உலக பொருளாதாரத்தில் 5-வது இடத்தில் இருக்கும் இந்தியா அடுத்த ஐந்தாண்டுகளில் 3-வது இடத்தை பிடிக்கும்.
2047-ஆம் ஆண்டுக்குள் தேசம் வல்லரசு அடையும் வகையில் தொலைநோக்குத் திட்டங்களை பாரதப் பிரதமர் மோடி செயல்படுத்தி வருகிறார்.
ஒரே பாரதம் உன்னத பாரதம் என்பதே பாரதப் பிரதமர் மோடியின் இலக்கு. எனவே, வரும் தேர்தலில் மீண்டும் பாஜக வெற்றி பெறும். மோடியே மீண்டும் பிரதமராக வருவார். மோடியை மக்கள் விரும்புகிறார்கள். மக்களை மோடி விரும்புகிறார் என்றார்.