99% தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டதாகப் பொய் சொல்கிறார் தமிழக முதல்வர் ஸ்டாலின் எனத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
ஊழலுக்கு எதிரான அண்ணாமலையின் ”என் மண் என் மக்கள்” பாதயாத்திரை, மதுராந்தகம் மற்றும் செய்யூர் சட்டமன்றத் தொகுதிகளில் நடைப்பெற்றது. இந்த பாதயாத்திரையில் ஆயிரக்கணக்காணோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பேசிய அண்ணாமலை,
கடினமாக உழைக்கும் நேர்மையான மக்கள் வசிக்கும் தொகுதிகள் இவை. கிராமங்களும், மீனவ மக்களும் நிறைந்த பகுதி. மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவில், மதுராந்தகம் ஏரி காத்த ராமர் கோவில் என ஆன்மீகம் சிறக்கும் மண். கடந்த 1798 ஆம் ஆண்டு வந்த பெருவெள்ளத்தில், ஏரி உடையாமல் மக்களைக் காத்து நின்ற ராமபெருமானுக்கான கோவில் இது.
இன்று, அயோத்தியில் குழந்தை ராமருக்கு நமது மத்திய அரசு கோயில் எழுப்பி சிறப்பித்திருக்கிறது. சமீபத்தில், மழை வெள்ளத்தில், சென்னையை தத்தளிக்க வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, அமைச்சர் சேகர்பாபு ஏரி காத்த ராமர் என்கிறார். தென்தமிழகத்தில் மழை வெள்ளம் வந்தபோது, இந்தப் பகுதியின் யாத்திரையை ஒத்தி வைத்துவிட்டு, பாஜக மட்டும்தான் களத்தில் மீட்புப் பணிகளிலும், நிவாரணப் பணிகளிலும் செயல்பட்டது.
ஆனால் முதலமைச்சர் ஸ்டாலின், இந்தி கூட்டணி சந்திப்பிற்காக டெல்லி சென்றிருந்தார். ஏரி காத்த ராமருக்கும், முதலமைச்சருக்கும் ஒரு துளி கூட சம்பந்தமில்லை. பல ஆயிரம் கோடிகளை செலவு செய்தும் சென்னை மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு, மக்கள் வெள்ளத்தில் மிதந்து கொண்டிருக்கும்போது, முதல்வர் மக்களைக் காப்பாற்றினார் என்று பொய் சொல்கிறார் அமைச்சர்.
தமிழகத்தில் இருக்கும் இந்த குப்பை அரசியலை அகற்ற வேண்டும். தமிழகம் முழுவதும் இந்த முறை நம்முடைய பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் பக்கம் வரவேண்டும். அவருடைய கரத்தை வலுப்படுத்த வேண்டும்.
இன்று, இந்தியாவையே காத்த ராமர் என்ற பட்டம், நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு மட்டுமே பொருந்தும்.
நாட்டு மக்கள் வளர்ச்சிக்காக, ஏழை மக்கள் மேம்பாட்டுக்காக, விவசாயத்தின் மறுமலர்ச்சிக்காக, தொடர்ந்து பாடுபடும் அற்புதமான ஒரு பிரதமரை நாம் பெற்றிருக்கிறோம்.
பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் நல்லாட்சியில், கடந்த 2019 ஆம் ஆண்டு கொடுத்த 295 தேர்தல் வாக்குறுதிகள் முழுவதையும் நிறைவேற்றியிருக்கிறோம். அடுத்த ஐந்து ஆண்டுகள், நமது மத்திய அரசு, நாட்டின் வளர்ச்சியை இன்னும் வேகப்படுத்தும் நோக்கிலான திட்டங்களை முன்வைத்து செயல்படும். ஆனால் திமுக தமிழகத்தில் கொடுத்த 516 தேர்தல் வாக்குறுதிகளில் 20 வாக்குறுதிகளைக் கூட முறையாக நிறைவேற்றாமல், 99% தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டதாகப் பொய் சொல்கிறார் தமிழக முதல்வர்.
சமையல் எரிவாயுவிற்கு ரூ.100 மானியம் என்று வாக்குறுதி கொடுத்து மூன்று ஆண்டுகள் கடந்தும், இன்னும் அதனை நிறைவேற்றவில்லை. 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தை 150 நாட்களாக்குவோம் என்று வாக்குறுதி கொடுத்து ஏமாற்றியிருக்கிறது. நகைக்கடன் தள்ளுபடி, கல்விக் கடன் ரத்து, கோவிட் தொற்று காலத்தில் பாதிப்படைந்த தொழில்முனைவோர்களுக்கு இழப்பீடு, நெல், கரும்புக்கு குறைந்தபட்ச ஆதார விலை ரூ.4,000 ஆக உயர்வு, பெட்ரோல், டீசல் விலை குறைப்பு, மாணவ மாணவியருக்கு 4G, 5G டேப்லட், மீனவப் பெருமக்களுக்கு 2 லட்சம் வீடுகள், பகுதி நேர ஆசிரியர்கள், செவிலியர்கள் பணி நிரந்தரம், என எந்தத் தேர்தல் வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை. மதுராந்தகத்தில் அரசு கலை அறிவியல் கல்லூரி, மதுராந்தகத்தில் தொழிற்பேட்டை என இந்த தொகுதிக்குக் கொடுத்த வாக்குறுதிகளைக் கூட திமுக நிறைவேற்றவில்லை, தமிழகத்தின் சுகாதாரம், கல்வி, காவல் துறை என அத்தனை துறைகளையும் சரிப்படுத்த வேண்டும்.
குடும்ப அரசியலை அகற்றி, சாமானிய மக்களுக்கான, ஊழலற்ற, நேர்மையான நல்லாட்சியைக் கொண்டு வரவேண்டும். 70 ஆண்டு கால திராவிட அரசியலில், ஆண்ட கட்சியும், ஆளும் கட்சியும் மாற்றி மாற்றி மக்களை ஏமாற்றியது தான் மிச்சம். நேர்மையான நல்லாட்சி என்பதை தமிழகம் காண திராவிடக் கட்சிகள் வாய்ப்பளிக்கவில்லை.
நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் பத்தாண்டு கால ஊழலற்ற, மக்கள் நலன் சார்ந்த நல்லாட்சிக்கு, தமிழகமும் துணையிருக்க வேண்டும். வரும் பாராளுமன்றத் தேர்தலில், தமிழகம் முழுவதும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களைத் தேர்ந்தெடுத்து, நமது பிரதமர் கரங்களை வலுப்படுத்த வேண்டும்.
பிப்ரவரி 27 அன்று, நமது #EnMannEnMakkal பயணத்தின் நிறைவு விழா, திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில், நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க, வெகு சிறப்பாக நடைபெறவிருக்கிறது.
இந்த யாத்திரை நடப்பதற்கு காரணமாகவும், உத்வேகமாகவும் விளங்கும் தமிழக மக்கள் அனைவரும், தங்கள் வீட்டு விழாவினைப் போல, குடும்பத்துடன் கலந்து கொண்டு, நம்முடைய பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு உங்களுடைய வாழ்த்துக்களையும், ஆசிகளையும் வழங்க வேண்டும் என்ற அன்பான வேண்டுகோளை வைத்துக் கொள்கிறேன் எனத் தெரிவித்தார்.