இங்கிலாந்திற்கு எதிரான 4ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியா 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-1 என்று கைப்பற்றியுள்ளது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4ஆவது டெஸ்ட் போட்டி ராஞ்சியில் நடைபெற்றது.
இதில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 353 ரன்கள் குவித்தது. பின்னர் வந்த இந்திய அணி 307 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதில், அறிமுக வீரர் துருவ் ஜூரெல் 90 ரன்கள் குவித்து 10 ரன்களில் சதம் அடிக்கும் வாய்ப்பை கோட்டைவிட்டார். இதையடுத்து 46 ரன்கள் முன்னிலையில் இங்கிலாந்து 2ஆவது இன்னிங்ஸை விளையாடியது.
இதில் 145 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 191 ரன்கள் முன்னிலை பெற்றது. இதைத் தொடர்ந்து 192 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு இந்திய அணி விளையாடியது. மூன்றாம் நாள் முடிவில் இந்திய அணி 40 ரன்கள் எடுத்த நிலையில், இன்றைய 4ஆம் நாள் ஆட்டத்தைத் இன்று தொடங்கியது. இந்திய அணி தொடக்கத்தில் விளையாடி நிலையில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
நன்றாக விளையாடிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் 37 ரன்கள் எடுத்த நிலையில் ஜோ ரூட் பந்தில் ஆட்டமிழந்தார். ஜெய்ஸ்வால் கொடுத்த கேட்ச் வாய்ப்பை ஆண்டர்சன் டைவ் அடித்து பிடித்து அசத்தினார். இவரைத் தொடர்ந்து கேப்டன் ரோகித் சர்மாவும் இறங்கி அடிக்க முயற்சித்து டாம் ஹார்ட்லி பந்தில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
அடுத்து வந்த ரஜத் படிதார் ரன் ஏதும் எடுக்காமல் சோயிப் பஷீர் பந்தில் ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து வந்த ரவீந்திர ஜடேஜாவும் 4 ரன்களில் பஷீர் பந்தில் ஆட்டமிழந்து நடையை கட்டினார். அதே ஓவரின் அடுத்த பந்தில் சர்ஃபராஸ் கான் கோல்டன் டக் முறையில் ஆட்டமிழந்தார்.
சீரான இடைவெளியில் இந்திய வீரர்கள் தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்து வந்த நிலையில் சுப்மன் கில் மற்றும் துருவ் ஜூரெல் இருவரும் நிதானமாக விளையாடி ரன்கள் குவித்தனர்.
இதில், 39 ரன்கள் வரையில் கில் ஒரு பவுண்டரி கூட அடிக்கவில்லை. இந்திய அணியின் வெற்றிக்கு 20 ரன்கள் தேவையாக இருந்த போது பஷீர் ஓவரில் 2 சிக்ஸர்களை பறக்க விட்டு தனது அரைசதத்தை பதிவு செய்தார்.
இதையடுத்து ஜூரெல் பவுண்டரி அடிக்கவே, கடைசியாக 2 ரன்கள் எடுத்து இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றது.
இங்கிலாந்திற்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-1 என்று இந்தியா வென்று புதிய சாதனை படைத்துள்ளது.