திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தைப் பார்வையிடும் பிரதமர் மோடி, சுமார் ரூ.1800 கோடி மதிப்பிலான மூன்று முக்கிய விண்வெளி உள்கட்டமைப்பு திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார்.
கேரளா, தமிழ்நாடு, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் பிப்ரவரி 27-28 தேதிகளில் பிரதமர் நரேந்திர மோடி பயணம் மேற்கொள்கிறார்.
பிப்ரவரி 27 அன்று காலை 10.45 மணியளவில் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்திற்குப் பிரதமர் மோடி செல்கிறார். மாலை 5.15 மணியளவில் மதுரையில் நடைபெறும் ‘எதிர்காலத்தை உருவாக்குதல் – வாகன உற்பத்தி துறையில் குறு, சிறு, நடுத்தர தொழில் முனைவோர்களுக்கான டிஜிட்டல் இயக்கம்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
பிப்ரவரி 28-ம் தேதி காலை 9:45 மணியளவில், தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் சுமார் 17,300 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைக்கிறார். மாலை 4:30 மணியளவில், மகாராஷ்டிராவின் யவத்மாலில் ஒரு பொது நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்கிறார். மேலும் மகாராஷ்டிராவின் யவத்மாலில் ரூ. 4900 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள பல வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். இத்திட்டத்தின் போது பிரதமர் வேளாண் மற்றும் பிற திட்டங்களின் கீழ் பயன்களையும் அவர் விடுவிப்பார்.
கேரளாவில் பிரதமர்
திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்திற்கு வருகை தரும் பிரதமரின் பயணத்தின் போது மூன்று முக்கியமான விண்வெளி உள்கட்டமைப்பு திட்டங்கள் தொடங்கி வைக்கப்படுவதால், நாட்டின் விண்வெளித் துறையை அதன் முழுத் திறனை உணர சீர்திருத்துவதற்கான பிரதமரின் பார்வை மற்றும் தொழில்நுட்ப, ஆராய்ச்சி, மேம்பாட்டு திறனை மேம்படுத்துவதற்கான அவரது உறுதிப்பாடு ஆகியவை ஊக்கமளிக்கும். இந்தத் திட்டங்களில் ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் பி.எஸ்.எல்.வி ஒருங்கிணைப்பு வசதி, மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோ உந்துவிசை வளாகத்தில் புதிய ‘செமி கிரையோஜெனிக்ஸ் ஒருங்கிணைந்த இயந்திரம் மற்றும் நிலை பரிசோதனை வசதி’, திருவனந்தபுரத்தில் உள்ள வி.எஸ்.எஸ்.சி.யில் ‘ட்ரைசோனிக் காற்று இயக்க சுரங்கம்’ ஆகியவை அடங்கும். விண்வெளித் துறைக்கு உலகத் தரம் வாய்ந்த தொழில்நுட்ப வசதிகளை வழங்கும் இந்த மூன்று திட்டங்களும் சுமார் 1800 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ளன.
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் பிஎஸ்எல்வி ஒருங்கிணைப்பு வசதி பிஎஸ்எல்வி ராக்கெட் ஏவப்படும் போது ஆண்டுக்கு 6 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக உயர்த்தப்படும். இந்த அதிநவீன வசதி எஸ்.எஸ்.எல்.வி மற்றும் தனியார் விண்வெளி நிறுவனங்களால் வடிவமைக்கப்பட்ட பிற சிறிய செலுத்து வாகனங்களின் ஏவுதல்களையும் பூர்த்தி செய்ய முடியும்.
மகேந்திரகிரியில் உள்ள ஐபிஆர்சியில் புதிய ‘செமி கிரையோஜெனிக்ஸ் ஒருங்கிணைந்த என்ஜின் மற்றும் நிலைப் பரிசோதனை வசதி’ செமி கிரையோஜெனிக் என்ஜின்கள் மற்றும் நிலைகளை உருவாக்க உதவும், இது தற்போதைய ஏவுதல் வாகனங்களின் பேலோட் திறனை அதிகரிக்கும். இந்த வசதி 200 டன் வரை உந்துவிசை இயந்திரங்களை சோதிக்க திரவ ஆக்ஸிஜன் மற்றும் மண்ணெண்ணெய் விநியோக அமைப்புகளைக் கொண்டுள்ளது.
வளிமண்டலத்தில் ராக்கெட்டுகள், விமானங்களின் காற்றியக்கவியல் சோதனைக்கு காற்று இயக்க சுரங்கங்கள் அவசியம். வி.எஸ்.எஸ்.சி.யில் திறக்கப்படும் “ட்ரைசோனிக் காற்று இயக்க சுரங்கம்” தொழில்நுட்ப அமைப்பு நமது எதிர்கால தொழில்நுட்ப மேம்பாட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்யும்.
தமது பயணத்தின்போது, ககன்யான் இயக்கத்தின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்து, விண்வெளி வீரர்களாக நியமிக்கப்படுபவர்களுக்கு ‘விண்வெளி சிறகுகள்’ என்னும் பதக்கத்தை வழங்குவார். ககன்யான் திட்டம் என்பது இந்தியாவின் முதல் மனித விண்வெளி திட்டமாகும், இதற்காக பல்வேறு இஸ்ரோ மையங்களில் விரிவான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
தமிழ்நாட்டில் பிரதமர்
மதுரையில், ‘வாகன உற்பத்தி துறையில் உள்ள சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோருக்கு எதிர்காலத்தை உருவாக்குதல் – டிஜிட்டல் இயக்கம்’ நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்று, வாகன உற்பத்தித்துறையில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர் இடையே அவர் உரையாற்றுவார்.
இந்திய வாகனத் தொழிலில் சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களை ஆதரித்து மேம்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட இரண்டு முக்கிய முன்முயற்சிகளையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். டிவிஎஸ் ஓபன் இயக்கத் தளம் மற்றும் டிவிஎஸ் இயக்கம் – திறன் மேம்பாட்டு மையம் ஆகியவை இந்த முயற்சிகளில் அடங்கும். நாட்டில் உள்ள சிறு,குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு ஆதரவளிப்பது, செயல்பாடுகளை முறைப்படுத்துவது, தன்னம்பிக்கை பெறவும் உதவுவது ஆகியவை பிரதமரின் தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதற்கான ஒரு நடவடிக்கையாக இந்த முன்முயற்சிகள் இருக்கும்.
தூத்துக்குடியில் நடைபெறும் பொது நிகழ்ச்சியில், வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் வெளி துறைமுக சரக்கு பெட்டக முனையத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுவார். இந்த சரக்குப் பெட்டக முனையம், வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தை கிழக்கு கடற்கரைக்கான கப்பல் போக்குவரத்து மையமாக மாற்றுவதற்கான ஒரு நடவடிக்கையாகும்.
வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தை நாட்டின் முதலாவது பசுமை ஹைட்ரஜன் துறைமுகமாக மாற்றும் பல்வேறு திட்டங்களையும் பிரதமர் மோடி தொடங்கி வைப்பார். கடல்நீரைக் குடிநீராக்கும் ஆலை, ஹைட்ரஜன் உற்பத்தி மற்றும் பதுங்கு குழி வசதி போன்றவை இந்தத் திட்டங்களில் அடங்கும்.
பசுமை கப்பல் முன்முயற்சியின் கீழ், இந்தியாவின் முதலாவது உள்நாட்டு பசுமை ஹைட்ரஜன் எரிபொருள் செல் உள்நாட்டு நீர்வழி கப்பலையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.
இந்தக் கப்பல் கொச்சி கப்பல் தளத்தில் தயாரிக்கப்படுகிறது. தூய்மையான எரிசக்தி தீர்வுகளைத் தழுவுவதற்கும் நாட்டின் நிகர பூஜ்ஜிய கரியமில வாயு வெளியீட்டை அடைவதற்கும் ஒரு முன்னோடி நடவடிக்கையாக இது சுட்டிக்காட்டப்படுகிறது. இந்த நிகழ்ச்சியின் போது 10 மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களில் உள்ள 75 கலங்கரை விளக்கங்களில் உள்ள சுற்றுலா வசதிகளையும் பிரதமர் மோடி அர்ப்பணிக்கிறார்.
இந்த நிகழ்ச்சியின் போது, வாஞ்சி மணியாச்சி – நாகர்கோவில் ரயில் பாதை, வாஞ்சி மணியாச்சி – திருநெல்வேலி பிரிவு மற்றும் மேலப்பாளையம் – ஆரல்வாய்மொழி பிரிவு உட்பட இரட்டை ரயில்பாதை திட்டங்களைப் பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிப்பார்.
சுமார் ரூ.1,477 கோடி செலவில் உருவாக்கப்பட்ட இரட்டைப் பாதைத் திட்டம், கன்னியாகுமரி, நாகர்கோவில் மற்றும் திருநெல்வேலியில் இருந்து சென்னை நோக்கி செல்லும் ரயில்களின் பயண நேரத்தை குறைக்க உதவும்.
சுமார் ரூ.4,586 கோடி செலவில் தமிழகத்தில் 4 சாலைத் திட்டங்களைப் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிப்பார். தேசிய நெடுஞ்சாலை 844-ல் ஜித்தண்டஹள்ளி-தர்மபுரி பிரிவை நான்கு வழிப்பாதையாக மாற்றுதல், தேசிய நெடுஞ்சாலை 81-ல் மீன்சுருட்டி-சிதம்பரம் பிரிவில் இருவழிப்பாதையாக மாற்றுதல், தேசிய நெடுஞ்சாலை 83-ல் ஒட்டன்சத்திரம்-மடத்துக்குளம் பிரிவை நான்கு வழிப்பாதையாக மாற்றுதல், தேசிய நெடுஞ்சாலை 83-ல் நாகப்பட்டினம்-தஞ்சாவூர் பிரிவை இருவழிப்பாதையாக மாற்றுதல் ஆகியவை இந்தத் திட்டங்களில் அடங்கும். இந்தத் திட்டங்கள் போக்குவரத்தை மேம்படுத்துதல், பயண நேரத்தைக் குறைத்தல், சமூகப்-பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துதல், புனித யாத்திரைப் பயணங்களை எளிதாக்குதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளன.
மகாராஷ்டிராவில் பிரதமர்
விவசாயிகளின் நலனுக்கான பிரதமரின் உறுதிப்பாட்டின் மற்றொரு நடவடிக்கையாக, பிரதமரின் விவசாயிகள் வருவாய் ஆதரவு நிதி திட்டத்தின் கீழ் ரூ.21,000 கோடிக்கு அதிகமான தொகை 16-வது தவணை யவத்மாலில் நடைபெறும் பொது நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு நேரடி பயன்கள் பரிமாற்றம் மூலம் விடுவிக்கப்படும். இதன் மூலம், ரூ.3 லட்சம் கோடிக்கும் அதிகமான தொகை 11 கோடிக்கும் அதிகமான விவசாயக் குடும்பங்களுக்கு அளிக்கப்படுகிறது.
மகாராஷ்டிராவில் சுமார் 88 லட்சம் விவசாயிகளுக்கு பயனளிக்கும் வகையில், சுமார் ரூ.3800 கோடி மதிப்பிலான விவசாயிகளுக்கான கௌரவ நிதி திட்டத்தின் கீழ் இரண்டாவது மற்றும் 3-வது தவணைகளையும் பிரதமர் மோடி வழங்குகிறார். மகாராஷ்டிராவில் பிரதமரின் விவசாயிகள் வருவாய் ஆதரவு நிதி திட்டத்தின் பயனாளிகளுக்கு இந்தத் திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு ரூ .6000 கூடுதல் தொகை வழங்கப்படுகிறது.
மகாராஷ்டிராவில் உள்ள 5.5 லட்சம் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.825 கோடி சுழல் நிதியைப் பிரதமர் மோடி வழங்குவார்.
மகாராஷ்டிராவில் ஒரு கோடி ஆயுஷ்மான் அட்டைகளை விநியோகிப்பதைப் பிரதமர் மோடி தொடங்கி வைப்பார். அனைத்து அரசுத் திட்டங்களும் 100 சதவீதம் செறிவூட்டப்பட வேண்டும் என்ற பிரதமரின் கனவை நனவாக்கும் வகையில், நலத்திட்டங்கள் பயனாளிகளை சென்றடைவதற்கான மற்றொரு நடவடிக்கை இதுவாகும்.
மகாராஷ்டிராவில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான மோடி வீட்டுவசதித் திட்டத்தைப் பிரதமர் தொடங்கி வைப்பார். 2023-24 நிதியாண்டு முதல் 2025-26 நிதியாண்டு வரை மொத்தம் 10 லட்சம் வீடுகள் கட்ட இந்தத் திட்டம் திட்டமிடப்பட்டுள்ளது. முதல் தவணையாக ரூ.375 கோடியை 2.5 லட்சம் பயனாளிகளுக்குப் பிரதமர் மோடி வழங்க உள்ளார்.
மகாராஷ்டிராவின் மராத்வாடா மற்றும் விதர்பா பகுதிகளுக்கு பயனளிக்கும் பல்வேறு நீர்ப்பாசனத் திட்டங்களைப் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிப்பார். இந்தத் திட்டங்கள் பிரதமரின் வேளாண் நீர்பாசனத் திட்டம், நீர் சஞ்சீவனி திட்டம் ஆகியவற்றின் கீழ் ரூ.2750 கோடிக்கும் அதிகமான செலவில் உருவாக்கப்பட்டுள்ளன.
மகாராஷ்டிராவில் ரூ.1,300 கோடிக்கும் அதிக மதிப்பிலான பல்வேறு ரயில் திட்டங்களையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.
மகாராஷ்டிராவில் சாலைத் துறையை வலுப்படுத்துவதற்கான பல்வேறு திட்டங்களைப் பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிப்பார். தேசிய நெடுஞ்சாலை 930-ல் வரோரா-வானி பிரிவை நான்கு வழிப்பாதையாக மாற்றுதல்; சகோலி-பந்தாரா மற்றும் சலைகுர்த்-திரோரா ஆகியவற்றை இணைக்கும் முக்கிய சாலைகளுக்கான சாலை மேம்பாட்டுத் திட்டங்கள் ஆகியவை இதில் அடங்கும்.
இந்தத் திட்டங்கள் இணைப்பை மேம்படுத்தி, பயண நேரத்தை குறைத்து, இப்பகுதியில் சமூகப்-பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும். யவத்மால் நகரில் பண்டிட் தீன்தயாள் உபாத்யாயாவின் சிலையையும் பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.