புதுதில்லியில் நடைபெறவுள்ள தேசிய இளைஞர் நாடாளுமன்ற விழாவில் பங்கேற்க தமிழகத்தில் இருந்து மூன்று இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகத்தின் சார்பில் 5-வது தேசிய இளைஞர் நாடாளுமன்ற விழா புதுதில்லியில் உள்ள சம்விதன் சதன் எனப்படும் பழைய நாடாளுமன்ற கட்டடத்தின் மைய மண்டபத்தில் மார்ச் 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.
நேரு யுவ கேந்திரா சார்பில் காணொலிக் காட்சி மூலம் நடத்தப்பட்ட மாநில அளவிலான போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பெற்றவர்கள் தேசிய இளைஞர் நாடாளுமன்ற விழாவில் பங்கேற்க தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த செல்வி வைஷ்ணபிச்சை, சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பி.அரவிந்த், திருச்சிராப்பள்ளி மாவட்டத்தைச் சேர்ந்த செல்வி மரியா ஸ்னோலின் ராஜேஷ்குமார் ஆகியோர் மாநில அளவிலான போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பிடித்தனர். தமிழகத்தைச் சேர்ந்த இந்த மூன்று இளைஞர்களும் தேசிய இளைஞர் நாடாளுமன்ற விழாவில் பங்கேற்கின்றனர்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கான நேரு யுவ கேந்திராவின் மாநில இயக்குநர் கே.குன்ஹம்மது, மாநில இளைஞர் நாடாளுமன்றப் போட்டியைத் தொடங்கி வைத்தார்.
இதில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மாவட்ட அளவிலான போட்டிகளில் 65 இளைஞர்கள் கலந்து கொண்டனர். முன்னணி கல்வியாளர்கள் இப்போட்டியின் நடுவர்களாக செயல்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.