பாரத பிரதமர் நரேந்திர மோடி வருகையை முன்னிட்டு, நெல்லையில் இன்றும், நாளையும் ட்ரோன் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் மூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை மாநகர பகுதிக்கு வருவதையொட்டி, போலீசார் வாகன தணிக்கை, தங்கும் விடுதிகள், பேருந்து நிலையங்கள் மற்றும் முக்கிய இடங்களில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக சோதனைகள் நடத்தி வருகிறார்கள்.
பிரதமர் ஹெலிகாப்டரில் வந்து இறங்கும் ஹெலிபேட் மற்றும் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் போலீஸ் அதிகாரிகளின் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
பாளையங்கோட்டையில் பொதுமக்கள், நீதிமன்றம் மற்றும் பள்ளி, கல்லூரிக்கு செல்பவர்களுக்கு எவ்வித போக்குவரத்து இடையூறு ஏற்படாத வகையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பொதுமக்கள் மற்றும் இலகுரக வாகனங்களைப் பயன்படுத்துபவர்கள் எவ்வித இடையூறுமின்றி, அந்த பாதையைப் பயன்படுத்தலாம். வாகனங்கள் நாளை மட்டும் மாநகர எல்லைக்குள் வராத வகையில் புறவழிச்சாலையைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.
விழாவிற்கு வருகை தரும் முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் அனைவரும் தங்களுடைய வாகனங்களை நிறுத்துவதற்காக ஒதுக்கப்பட்டுள்ள இடங்களில் நிறுத்த அறிவுறுத்தப்படுகிறார்கள். வாகனங்களை சாந்திநகர் காவலர் குடியிருப்பு அருகில் கார்த்திக் திரையரங்க மைதானம், மருத்துவக்கல்லூரி பின்பகுதி, இதயம் கல்யாண மண்டபம் அருகில் (முக்கியஸ்தர்களுக்கு மட்டும்) நிறுத்த வேண்டும்.
பிரதமர் வருவதை முன்னிட்டு திருநெல்வேலி மாநகர பகுதி முழுவதும் விமானங்கள், ஹெலிகாப்டர் மற்றும் டிரோன்கள் பறக்க இன்றும், நாளையும் தடை செய்யப்பட்டு உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.