மதுரை மீனாட்சி அம்மனை பிரதமர் மோடி இன்று இரவு தரிசனம் செய்கிறார்.
பிரதமர் மோடியின் மதுரை வருகையை முன்னிட்டு இன்றும் நாளையும் இரண்டு நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்திற்கு இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி இன்று வருகை தர உள்ளார். இதற்காக கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து புறப்படும் பிரதமர் மோடி பிற்பகல் 2.06 மணிக்கு சூலூருக்கு வர இருக்கிறார். அங்கிருந்து பிற்பகல் 2.10 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் பல்லடம் செல்கிறார்.
பிற்பகல் 2.45 மணிக்கு மாதப்பூரில் நடைபெறும் என் மண் என் மக்கள் பாதையாத்திரை நிறைவு விழாவில் பங்கேற்கிறார். இந்த விழாவிற்காக தாமரை வடிவில் அமைக்கப்பட்டுள்ள விழா மேடையில் 5 லட்சம் பேர் அமர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு பிற்பகல் 3.50 மணிக்கு பல்லடத்தில் இருந்து புறப்பட்டு மாலை 5 மணிக்கு மதுரை செல்கிறார்.
மதுரை வீரபாஞ்சானில் சிறு, குறு நடுத்தர தொழிலதிபர்கள் டிஜிட்டல்
மாநாட்டில் பங்கேற்றுவிட்டு இரவு 7:00 மணிக்கு பிரதமர் மோடி, தனியார் ஓட்டலுக்கு
செல்கிறார்.
அங்கு சிறிது நேரம் ஓய்வுக்கு பின் இரவு 8:00 மணிக்கு பசுமலை, பழங்காநத்தம், திருப்பரங்குன்றம் ரோடு, தெற்குவெளிவீதி வழியாக மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வருகிறார். மீனாட்சி அம்மன், சுவாமி சன்னதியில் தரிசனம்
செய்துவிட்டு இரவு 9:15 மணிக்கு நடக்கும் பள்ளியறை பூஜையில்
பங்கேற்கிறார்.
இதையொட்டி மதுரை நகருக்குள்ளும் இன்று மாலை 6:00 மணி முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. கோயிலில் இருந்து புறப்படும் பிரதமர் மோடி, வந்த வழியாகவே சென்று தனியார் விடுதியில் ஓய்வெடுக்கிறார்.
அதனைத் தொடர்ந்து நாளை காலை மதுரையிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் தூத்துக்குடிக்கு செல்கிறார். பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு போலீசார் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மதுரையில் இன்றும் நாளையும் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மதுரையிலும் இரண்டு நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மதுரையில் இன்றும் நாளையும் திருச்சியில் இருந்து மதுரை வரும் வாகனங்கள் ஒத்தக்கடை வழியாக மாட்டுத்தாவணி செல்லலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சியில் இருந்து தூத்துக்குடி விருதுநகர், நெல்லைக்கு செல்லும் வாகனங்கள் ஒத்தக்கடை வழியாக செல்லும். காரைக்குடி, சிவகங்கையில் இருந்து மதுரை, திருச்சி செல்லும் வாகனங்கள் பூவந்தி வழியாக அந்தந்த மாவட்டங்களை சென்றடையும்.
ராமநாதபுரத்தில் இருந்து மதுரை, திருச்சி செல்லும் வாகனங்கள் சக்குடி பாலம் வழியாக சென்றடையும். தூத்துக்குடியில் இருந்து மதுரை, திருச்சி செல்லும் வாகனங்கள் ஏ.முக்குளம் சந்திப்பு வழியாக சென்றடையும் என அறிவுறுத்தல்கள் கொடுக்கப்பட்டுள்ளது.