பாரத பிரதமர் நரேந்திர மோடி மதுரைக்கு வருவதை முன்னிட்டு, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மதுரை எல்லைக்குள் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பாரத பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் சுற்றுப்பயணமாக தமிழகம் வருகிறார். திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து கோவையில் உள்ள சூலுார் விமான படைத்தளத்துக்கு வருகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பல்லடத்துக்குச் செல்லும் பிரதமர் மோடி, பிற்பகல் 2.40 மணிக்கு பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.
தொடர்ந்து, பல்லிடத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் மதுரைக்கு செல்கிறார். பின்னர், டிவிஎஸ் பள்ளி வளாகத்தில் நடக்கும் சிறு, குறு தொழில் முனைவோருக்கான டிஜிட்டல் செயலாக்க திட்ட கருத்தரங்கில் பங்கேற்று உரையாற்றுகிறார்.
பாரத பிரதமர் நரேந்திர மோடி வருகையொட்டி, மதுரையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்புப் பணிக்காக, சுமார் 6 ஆயிரம் முதல் 10 ஆயிரம் போலீசார் வரை பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மதுரை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஏற்கெனவே, எஸ்பிஜி அதிகாரிகள் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனா். மதுரை மாநகா் முழுவதும் போலீஸாா் குவிக்கப்பட்டு, உச்சக்கட்ட பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
பிரதமரின் வருகையை முன்னிட்டு, மதுரையில் இரண்டு நாள்களுக்கு ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் சங்கீதா தெரிவித்துள்ளார். மேலும், இரண்டு நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்து மாவட்ட காவல்துறை உத்தரவிட்டுள்ளது. மதுரை வழியாக வெளியூர் செல்லக்கூடிய அனைத்து வாகனங்களும் மாற்று வழித்தடத்தில் இயக்க உத்தரவிட்டுள்ளது.