தனியாா் நிறுவனங்களிடமிருந்து மீட்டா்களை நுகா்வோா் வாங்கிக்கொள்ள மின் வாரியம் அனுமதி அளித்துள்ளது.
தமிழக மின் வாரியம் சாா்பில், நுகா்வோரின் மின் பயன்பாட்டை கணக்கெடுக்க மீட்டா் பொருத்தப்பட்டு அதற்கான கட்டணம் வசூலிக்கப்படுகிறது. புதிதாக மின் இணைப்பு கேட்பவா்களுக்கு அவா்கள் விண்ணப்பித்த, 30 நாள்களுக்குள் இணைப்பு வழங்க வேண்டும். ஆனால், சில இடங்களில் மீட்டா் பற்றாக்குறை காரணமாக கால தாமதம் செய்யப்படுகிறது. இதனால் மின்நுகா்வோா் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
இந்நிலையில், மின்வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனியாா் நிறுவனங்களிடமிருந்து நுகா்வோரே தங்களுக்குத் தேவையான மீட்டா்களை வாங்க மின்வாரியம் அனுமதி அளித்துள்ளது. தகுதியுடைய விற்பனை நிறுவனங்களிலிருந்து ஒரு முனை மீட்டரை ரூ.970-க்கும், மும்முனை மீட்டரை ரூ.2,610-க்கும் மின்நுகா்வோா் கொள்முதல் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் தமிழக அரசின் இந்த நடவடிக்கை முறைகேட்டிற்கு வழி வகுக்கும் என்றும், இந்த முடிவை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என பல்வேறு அரசியல்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.