பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்கும் போது தமிழகத்திலிருந்து 39 எம்பிக்களை லோக்சபாவிற்கு அனுப்புவது உறுதி எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சூளுரைத்தார்.
திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் நடைபெற்ற தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலையின் ‘என் மண், என் மக்கள்’ பாதயாத்திரையின் நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று சிறப்புரையாற்றினார். இவ்விழாவில் பிரதமர் மோடி உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சித்தலைவர்கள் பங்கேற்றனர்.
விழாவில் பேசிய பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை,
நேரத்தின் அருமை கருதி எல்லோருக்கும் வாழ்த்துக்களை வணக்கங்களை தெரிவித்துக்கொள்கிறன். தமிழ்நாட்டில் நாம் மிகப்பெரிய சரித்திரத்தில் இடம்பெற்றிருக்கிறோம். இத்தனை நாட்கள் எதற்காக காத்திருந்தோமோ அது தற்போது நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
இன்னும் 60 நாட்கள் மட்டும்தான். நம்முடைய பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்பார். 400 எம்பிக்களை தாண்டி ஆட்சியில் அமரும் போது தமிழ்நாட்டில் இருந்து தேசிய ஜனநாயகக் கூட்டணியைச் சேர்ந்த 39 எம்பிக்கள் அழகு சேர்ப்பார்கள்.
எவ்வளவு கடுமையாக இந்த யாத்திரைக்காக உழைத்திருக்கிறோம். இது யாத்திரையின் நிறைவு விழாவாக இருந்தாலும் இன்னும் 60 நாட்கள் இருக்கிறது. கண் துஞ்சாமல் உழைக்க வேண்டும். தமிழ்நாட்டில் இருந்து 39 எம்பிக்களை லோக்சபாவிற்கு அனுப்பும் வரை நமக்கு ஓய்வு இல்லை.
பத்தாண்டுகளுக்குப் பிறகு சரித்திரத்தை திரும்பி பார்க்கும் போது தமிழ்நாட்டின் மாற்றம் பல்லடத்தில் நிகழ்ந்தது. அப்போது பிரதமர் மோடி இருந்தார் நானும் இருந்தேன் அந்த சரித்திரத்தில் இருப்போம்.
பட்டி தொட்டி எங்கும் மோடியின் புகழ் பரவியுள்ளது. ஜல்லிக்கட்டு மீண்டும் தமிழ்நாட்டில் நடைபெற காரணம் பிரதமர் மோடி மட்டுமே என்று தெரிவித்தார். பொய் பரப்புரைகளை வென்று, நாம் வெற்றி பெற வேண்டும். அதற்கு தமிழ்நாட்டில் இருந்து 39 தொகுதிகளை வென்று தர வேண்டும். அனைவரும் அர்ப்பணிப்பு உணர்வோடு பாடுபட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். நீங்கள் கனவு காணும் தமிழகத்தை நாங்கள் உருவாக்குவோம் என்று தெரிவித்தார்.