நோய் தடுப்பு மற்றம் ஆரோக்கிய மேம்பாட்டில் பழங்கால சித்த மருத்துவம் என்ற தலைப்பிலான இரண்டு நாள் தேசிய கருத்தரங்கம் சென்னையில் இன்று தொடங்குகிறது.
நோய் தடுப்பு மற்றம் ஆரோக்கிய மேம்பாட்டில் பழங்கால சித்த மருத்துவம் என்ற தலைப்பிலான தேசிய கருத்தரங்கம் பிப்ரவரி 28 மற்றும் 29 ஆகிய இரண்டு நாட்கள் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெறுகிறது.
ஆயுஷ் அமைச்சகத்தின் ஆதரவுடன் மத்திய சித்தா ஆராய்ச்சி கவுன்சில் இந்தக் கருத்தரங்கத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது. இதில் மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் இணைச் செயலாளர் பாவனா சக்சேனா, மத்திய சித்தா ஆராய்ச்சி கவுன்சிலின் ஆலோசனைக் குழுத்தலைவர் டாக்டர் ஜி வேலுச்சாமி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
சித்த மருத்துவ மாணவர்கள், ஆய்வாளர்கள், வல்லுநர்கள், சித்த மருத்துவர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோரும் இதில் கலந்து கொள்கின்றனர். இரண்டு நாள் மாநாட்டில் 6 அமர்வுகள் இடம்பெற உள்ளன.
இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக மருத்துவத் தாவரங்கள் குறித்த கண்காட்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் 200-க்கும் அதிகமான மூலிகைத் தாவரங்கள் காட்சிப்படுத்தப்படுவதுடன், அவற்றின் பயன்கள் மற்றும் நோய்தீர்க்கும் தன்மைகள் குறித்தும் விளக்கங்கள் இடம்பெறும்.