மரபணு ஆய்வு உலகெங்கிலும் எதிர்காலத்துக்கான சுகாதார உத்திகளை, சிகிச்சைகள் மற்றும் வருமுன் காக்கும் நடவடிக்கைகளை தீர்மானிக்கப் போகிறது என மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.
இந்திய விஞ்ஞானிகள் பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த 10,000 இந்தியர்களின் மரபணுக்களை வரிசைப்படுத்தி மரபணு அடிப்படையிலான தீர்வுகளுக்கு வழிவகுக்கும் தரவுத்தளத்தை உருவாக்கியுள்ளனர் என்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.
தலைநகர் டெல்லியில் ஒரு விழாவில் உரையாற்றிய மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், “மரபணு ஆய்வு உலகெங்கிலும் எதிர்காலத்துக்கான சுகாதார உத்திகளை, சிகிச்சைகள் மற்றும் வருமுன் காக்கும் நடவடிக்கைகளை தீர்மானிக்கப் போகிறது” என்று கூறினார்.
விஞ்ஞான ரீதியில் முன்னேறிய நாடுகளின் கூட்டமைப்பில் இந்தியா முன்னணி தேசமாக உருவாகி வருவதால், இந்தியப் பிரச்சினைகளுக்கு இந்தியாவே தீர்வுகளைக் காண வேண்டிய அவசியம் உள்ளது என்று கூறினார்.
நாடு முழுவதும் உள்ள அனைத்து முக்கிய மொழி மற்றும் சமூகக் குழுக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் 99 சமூகங்களைச் சேர்ந்த 10,000 ஆரோக்கியமான நபர்களின் முழு மரபணுவையும் வரிசைப்படுத்துவதன் மூலம் பல்வேறு இந்திய சமூகத்தினரின் மரபணு மாறுபாடுகளைக் கண்டறிந்து பட்டியலிடுவதற்கான லட்சிய இலக்குக்காக உயிரி தொழில்நுட்பத் துறையை ஜிதேந்திர சிங் பாராட்டினார்.
1.3 பில்லியன் இந்திய மக்கள்தொகை கொண்ட நம் பாரதத்தில் 4,600-க்கும் மேற்பட்ட இனத்தை சேர்ந்த மக்கள் உள்ளனர் என்று கூறினார்.
மேலும் அவர், “தற்போதைய மக்கள்தொகையின் மரபணுப் பன்முகத்தன்மைக்கு இந்தக் காரணிகள் பங்களித்துள்ளன. இந்திய மக்கள்தொகை பல மாறுபாடுகளைக் உள்ளடக்கியது. பெரும்பாலும், இந்த குழுக்களில் சிலவற்றில் பல நோய்களை உண்டாக்கும் கூறுகள் உள்ளன. எனவே, மக்கள்தொகை அடிப்படையிலான அல்லது நோய் அடிப்படையிலான கண்டுபிடிப்புகளை உலகின் பிற இந்தியர்களுக்குப் பொருத்திப் பார்க்க முடியாது” என்று கூறினார்.
இந்திய மரபணுக்களின் தரவுத்தளத்தை உருவாக்குவது என்பது இந்தியாவின் மக்கள்தொகையில் பல்வேறு சமூகக் குழுக்களுக்கு இருக்கும் தனித்துவமான மரபணு மாறுபாடுகளைப் ஆராய்ச்சியாளர்கள் அறிந்துகொள்ள உதவும் என்றும் மருந்துகள் மற்றும் சிகிச்சைகளைத் தயாரிக்கவும் அதைப் பயன்படுத்தலாம் என்றும் மத்திய அமைச்சர் குறிப்பிட்டார்.
குறைந்தது 1,00,000 மரபணுக்களை வரிசைப்படுத்தும் திட்டங்களைக் கொண்ட நாடுகளில் இங்கிலாந்து, சீனா மற்றும் அமெரிக்கா ஆகியவை மட்டுமே உள்ளது.