மத்திய பிரதேச மாநிலம் திண்டோரி அருகே, சரக்கு வாகனம் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்தவர்களில் 14 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
மத்திய பிரதேச மாநிலம் திந்தூரி மாவட்டத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு விட்டு, கிராமவாசிகள் சிலர் தங்களுடைய தேவரி கிராமத்திற்கு சரக்கு வாகனம் ஒன்றில் திரும்பி கொண்டிருந்தனர். அந்த வாகனம், பட்ஜார் கிராமத்துக்கு அருகே வரும் போது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையில் தாறுமாறாக ஓடி விபத்துக்குள்ளானது.
இந்த கோர விபத்தில், சம்பவ இடத்திலேயே 14 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும், 21 பேர் காயமடைந்தனர். இதுகுறித்து அப்பகுதியில் இருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலின் பேரில் விரைந்து சென்ற போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இறந்தவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மாநில முதல்வர் மோகன் யாதவ் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.