இங்கிலாந்தின் உயரிய விருதான Knight Commander விருது பாரதி ஏர்டெல் நிறுவனர் மற்றும் தலைவர் சுனில் பாரதி மிட்டலுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விருதை வென்ற முதல் இந்திய குடிமகன் என்ற பெருமையை பெற்றார் சுனில் பார்தி மிட்டல்.
இந்தியாவின் 2வது பெரிய டெலிகாம் சேவை நிறுவனமான ஏர்டெல்-ன் தாய் நிறுவனமான பாரதி ஏர்டெல் நிறுவனர் மற்றும் தலைவர் சுனில் பாரதி மிட்டலுக்கு, இந்திய-பிரிட்டிஷ் வணிக உறவுகளை வலுப்படுத்தியமைக்காக, பிரிட்டிஷ் மன்னர் மூன்றாம் சார்லஸ் ஆல், கே.பி.இ எனப்படும் Knight Commander விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.
KBE எனப்படுவது பிரிட்டிஷ் அரசின் உயரிய விருதாகும். Knight Commander of the Most Excellent Order விருது பெறும் முதல் இந்தியர் என்ற பெருமையை சுனில் பார்தி மிட்டல் பெற்றுள்ளார்.
இதுகுறித்து பேசிய சுனில் மிட்டல், ” பிரிட்டன் மன்னர் சார்லஸ் அவர்களிடமிருந்து இந்த உயரிய விருது பெறுவதை நான் மிகவும் பெருமையாகக் கருதுகிறேன். பிரிட்டன் இந்தியாவும் வரலாற்று ரீதியான உறவுகளைக் கொண்டுள்ளன. தற்போது, இந்த உறவும், ஒத்துழைப்பும் புதிய கட்டத்தை நோக்கி நகர்ந்து வருகின்றன.
இந்தியா – பிரிட்டன் இரு பெரும் நாடுகளுக்கிடையேயான பொருளாதார மற்றும் இருதரப்பு வர்த்தக உறவுகளை வலுப்படுத்துவதற்காக நான் தொடர்ந்து பணியாற்ற உறுதி கொண்டு உள்ளேன் ” எனக் கூறினார்.
சுனில் மிட்டல் தவிர, எக்செட்டர் பல்கலைக்கழகத்தின் கடல்கள், தொற்றுநோயியல் மற்றும் மனித ஆரோக்கியம் பிரிவின் தலைவர் லோரா ஈ. ஃப்ளெமிங் மற்றும் சுற்றுச்சூழல் மற்றும் மனித ஆரோக்கியம், கல்வி மற்றும் கலைகள் பிரிவின் பேராசிரியர் எட்னா லாங்லி ஆகியோரின் பங்களிப்பிற்காகக் கௌரவ CBE விருது வழங்கப்பட்டுள்ளது.
பிரிட்டன் நாட்டின் குடிமக்களுக்கு வழங்கப்படும் உயரிய கௌரவங்களில் kbe ஒன்றாகும். இது வெளிநாட்டு குடிமக்களுக்கு கௌரவ அடிப்படையில் வழங்கப்படுகிறது.