தனியார் தொலைக்காட்சி கேமரா மேன் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக சென்னை நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் பத்திரிக்கையாளர்களும், தி.மு.கவினரும் குவிந்து வருவதால் பதற்றம் நிலவி வருகிறது.
ரூ.2,000 கோடி ரூபாய் போதைப் பொருளை தி.மு.க அயலக அணி அமைப்பாளர் ஜாபர் சாதிக் கடத்தியதாக, டெல்லி போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
அதன் தொடர்ச்சியாக, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள, சென்னை மேற்கு தி.மு.க மாவட்டச் செயலாளர் சிற்றரசுவின் அலுவலகக் கட்டிடத்திற்குக் கீழ் உள்ள “சகாரா எக்ஸ்பிரஸ்” என்ற கொரியர் அலுவலகத்தில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் சோதனையிட்டதாகத் தகவல் வெளியானது.
அதுகுறித்து செய்தி சேகரிக்கச் சென்ற தனியார் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் செந்தில் என்பவரை, அறையில் கட்டி வைத்து, கொடூரமான முறையில் தி.மு.கவினர் தாக்கியுள்ளனர். இது தொடர்பாக, தனியார் செய்தி ஒளிப்பதிவாளர் செந்தில் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து நுங்கம்பாக்கம் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், குற்றவாளிகள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்யவில்லை என கூறப்படுகிறது.
தற்போது, நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் பத்திரிக்கையாளர்களும், தி.மு.கவினரும் குவிந்து வருவதால பரபரப்பும், பதற்றமும் நிலவி வருகிறது.