தமிழகத்தைச் சேர்ந்த முனைவர் செந்தில்குமார் கண்டுபிடித்த ‛எக்ஸ்ப்லைஃபெப்’ என்ற மருந்திற்கு உலக அளவில் அங்கீகாரம் கிடைத்துள்ளது.
பென்சிலின் மருந்து :
‛அலெக்ஸாண்டர் பிளம்மிங்’ என்ற விஞ்ஞானி பென்சிலின் என்ற உயிர் காக்கும் மருந்தினை கண்டுபிடித்தார். இந்த மருந்து சிறந்த ஆன்டிபயாட்டிக்காக இருந்து வருகிறது. லட்சக்கணக்கான மனித உயிர்களைக் காக்க இன்று வரை மருத்துவ உலகில் பயன்பட்டு வருகிறது.
நுண்ணுயிரிகளுக்கு இடையே எல்லைத் தகராறு உண்டு. இந்த உண்மையைக் கண்டறிந்த ஸ்காட்லாந்து நாட்டு அறிவியல் அறிஞர் அலெக்ஸாண்டர் ஃபிளம்மிங், 1928-ம் ஆண்டில் ஆன்டிபயாட்டிக் மருந்தைக் கண்டறிந்தார்.
இவர் கண்டுபிடித்த பென்சிலின் இரண்டாம் உலகப் போரின் போது தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்த பெருமளவு உதவியது. அச்சமயம் உயிரிழப்பு எளிதாக கட்டுப்படுத்தப்பட்டது. தொற்றுக்கு ஆளான பெண்களையும் குணப்படுத்த உதவியது.
‛எக்ஸ்ப்லைஃபெப்’ மருந்து :
பென்சிலின் போன்ற மருந்துக்கு அடுத்தபடியாக தற்போது தமிழகத்தை சேர்ந்த முனைவர் செந்தில்குமாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ள ‛எக்ஸ்ப்லைஃபெப்’ என்ற மருந்து சிறந்த உயிர் காக்கும் மருந்தாக செயல்படுகிறது. இம்மருந்திற்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து தரக்கட்டுப்பாட்டு நிறுவனம் (FDA)அங்கீகாரம் வழங்கி உள்ளது.
முனைவர் செந்தில்குமார் கண்டுபிடித்திருக்கும் இந்த மருந்து உலகின் ஐரோப்பா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் விற்பனை செய்யப்படும் முதல் இந்திய மருந்து. இது இந்தியாவுக்கே கிடைத்த பெருமை. இதன் மூலம் நம் நாட்டிற்கு வருமானமும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
மருந்தின் சிறப்பு :
‛எக்ஸ்ப்லைஃபெப்’ என்ற இந்த மருந்து சிறுநீர் குழாயில் பாக்டீரியாவினால் ஏற்படும் பல வகையான தொற்றுகளை நீக்குவதில் சிறந்து செயல்படுகிறது. நுரையீரலில் ஏற்படும் நிமோனியா போன்ற நோயை குணப்படுத்துவதிலும் நன்றாக செயல்படுகிறது. சிறுநீர்க்குழாய் தொற்றுக்கு வழக்கமாக கொடுக்கப்படும் மருந்தினை காட்டிலும் சிறப்பாக செயல்படுவதாக மருத்துவர்கள் பாராட்டி வருகின்றனர்.
கண்டுபிடிப்பின் சாத்தியம் :
பாரதிதாசன் பல்கலையில் நைட்ரோ கெட்டிரோ சைக்ளிக் சேர்ம வகையைச் சார்ந்த வேதிப்பொருட்களை உருவாக்கும் ஆராய்ச்சியில் இறங்கினார் செந்தில்குமார். இவை புற்று நோயை குணப்படுத்தும் மருந்தாகும்.
இந்த ஆராய்ச்சியின் போது தன் விருப்பத்திற்கு ஏற்ப ஒரு வேதிப்பொருளை உருவாக்கும் கலையினை பேராசிரியர் ஜெயராமன் மற்றும் தன் உடன் ஆராய்ச்சி செய்த நண்பர்களிடம் கற்றுத் தேர்ந்தார் முனைவர் செந்தில்குமார்.
பின்னர் குஜராத் மாநிலத்தின் டோரன்ட் பார்மாவில் சில வருடங்கள் மருந்து ஆராய்ச்சியாளராக பணியாற்றி வந்தார். இவரின் திறமைகளை கண்டு வியந்த தமிழகத்திலுள்ள ஆர்க்கிட் பார்மா என்ற நிறுவனம் இவரை பணியமர்த்தியது.
சென்னை அருகே இயங்கி வரும் இந் நிறுவனத்தில் நுண்ணுயிர்களை அழிக்கப் பயன்படும் மருந்தினை கண்டுபிடிக்க பல ஆண்டுகளாக ஆராய்ச்சி மேற்கொண்டார். நீண்ட ஆராய்ச்சி மற்றும் உழைப்பின் காரணமாக இவருக்கு சிறந்த நிபுணத்துவம் கிடைத்தது.
கண்டுபிடிப்பு நிறைவேற்றம் :
உலகமெங்கும் பல்வேறு ஆன்டிபயாட்டிக் மருந்துகள் பயன்பாட்டில் இருந்தாலும் ஆண்டுக்கு 12.7 லட்சம் பேர் நோய் தொற்றினால் உயிர் இழக்கின்றனர். இதற்கு காரணம் நோய் தொற்றினை உருவாக்கும் பாக்டீரியா, நோயாளிகள் சாப்பிடும் ஆன்டிபயாட்டிக் மருந்தினை செயல் இழக்க செய்யும் அளவிற்கு வல்லமை பெற்று விடுவது தான்.
இந்த ஆன்டிபயாட்டிக்கை செயல் இழக்க செய்வது பாக்டீரியாவால் உருவாக்கப்படும் பீட்டா லேக்டமேஸ் என்ற நொதி தான். இந்த நொதியை செயல் இழக்க செய்யும் மருந்தினை கண்டுபிடித்து விட்டால் பாக்டீரியாவை எளிதாக அழித்து விடலாம்.
இந்த உண்மையின் அடிப்படையில் நொதியை செயல் இழக்க செய்யும் வேதிப்பொருளினை செந்தில் குமார் வடிவமைத்தார். கணினியின் உதவியால் இதை உறுதிப்படுத்திக் கொண்டார். ஆய்வுக்கூடத்தில் தன் குழுவினருடன் எக்ஸ்ப்லிபன் என்ற மருந்தினை 2005 ம் ஆண்டு உருவாக்கினார்.
சோதனைகள் வெற்றி :
எலி போன்ற விலங்குகளுக்குக் கொடுத்துப் பார்த்து, எந்தப் பாதிப்பும் இல்லை எனக் கண்டறிந்தனர். அடுத்து, மனிதர்கள் மீது மூன்று கட்டமாக சோதனை நடத்தப்பட்டதிலும் வெற்றியே.
மூன்று கட்ட சோதனைகளும் ஐரோப்பிய நாடுகளிலேயே நடத்தப்பட, ‘இந்த மருந்து மனிதர்களுக்கு உகந்தது’ என ஐரோப்பிய மருந்துக் கட்டுப்பாடு நிறுவனம் ஏற்றுக் கொண்டது.
எக்ஸ்லிபன் என்று இந்த மருந்தினை சீனாவில் விற்பனை செய்ய அனுமதித்திருப்பதன் மூலம் மட்டுமே இந்திய ரூபாயில் அந்நிறுவனத்திற்கு 620 கோடி அளவிற்கு வருவாய் கிடைத்தது.
இந்தியாவில் இந்த மருந்தின் விற்பனையின் முழு உரிமையும் ஆர்க்கிட் நிறுவனத்திடம் மட்டுமே உள்ளது. இதனால், ஆர்க்கிட் ஃபார்மாவின் சந்தை மதிப்பு 25 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்துள்ளது.
ஆர்க்கிட் போன்ற மருந்து ஆராய்ச்சி நிறுவனங்கள் வளர்வதால் நுண்ணுயிரியல் மற்றும் உயர் தொழில் நுட்பவியல் வேதியியல், பார்மசி படித்த மாணவ மாணவியர்களுக்கு வேலை வாய்ப்புகள் மற்றும் உப தொழில்கள் பெருகும்.
பிற நாடுகளில் நம் நாட்டு மருந்துகளை விற்பனை செய்வதால் நம் நாட்டுக்கு பெரும் லாபம் கிடைக்கும். நாட்டின் வேகமான வளர்ச்சிக்கு உதவும் முனைவர் செந்தில்குமார் போல நிறைய பேர் உருவாக வேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பமாக உள்ளது.