தமிழகத்தில் உள்ள தொடக்கக் கல்வித்துறையில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களில், கடந்த 2009 -ம் ஆண்டு ஜூன் 1 -ம் தேதிக்கு பின்னர் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும், அதற்கு முன்னர் நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும் ஊதிய முரண்பாடுகள் இருந்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை முன்வைத்து இடைநிலை ஆசிரியர்கள் கடந்த 2022ஆம் ஆண்டு முதல் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இடைநிலை ஆசிரியர்கள், கடந்த டிசம்பர் மாதம் மீண்டும் போராட்டம் நடத்தியபோது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்த 2023 புத்தாண்டில் இடைநிலை ஆசிரியர்களுக்கு 3 நபர் அடங்கிய குழு ஒன்றை அமைத்து, ஊதிய முரண்பாடு குறித்து கருத்துக்களைக் கேட்டு அரசுக்கு அனுப்ப உத்தரவிட்டார்.
சம வேலைக்கு சம ஊதியம் என்ற ஒற்றைக் கோரிக்கையை முன்வைத்து, கடந்த பிப்ரவரி 19 -ம் தேதி முதல் காலவரையற்ற போராட்டத்தை ஆசிரியர்கள் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், 12-வது நாளாக இடைநிலை ஆசிரியர்கள் தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்களில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை துவக்கி உள்ளனர்.
தற்போது வரை கடந்த 12 நாட்களாக போராட்டம் தொடர்ந்து வருகிறது. போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர திமுக அரசு தயக்கம் காட்டி வருவதால் போராட்டம் தொடர்கிறது.