பெங்களூரூ ஹோட்டல் குண்டு வெடிப்பு தொடர்புடையதாக கருதப்படும் சந்தேக நபர் குறித்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூரூ ஒயிட்பீல்டு அருகே குந்தலஹள்ளி பகுதியில் பிரபல ராமேஸ்வரம் கபே ஹோட்டல் செயல்பட்டு வருகிறது.இந்த ஹோட்டலில் நேற்று பயங்கர சத்தத்துடன் அடுத்தடுத்து இரு குண்டுகள் வெடித்தன. இதில் அங்கு உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்த 10 பேர் காயம் அடைந்தனர்.
இது தொடர்பாக தகவல் அறிந்த பெங்களூரு போலீசார்,சம்பவ இடத்திற்கு சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டனர். மேலும் தேசிய புலனாய்வு அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் குண்டு வெடிப்பு தொடர்பான சந்தேகம் நபர் குறித்து வீடியோ வெளியாகியுள்ளது. முகக்கவசம், கண்ணாடி, தொப்பி அணிந்த அந்த நபர் மதியம் 12.30 மணிக்கு ஹோட்டலுக்கு சென்று சாப்பிட்டுள்ளார்.பின்னர் தான் கொண்டு வந்த பையை கையில் கழுவும் இடத்தில் வைத்து விட்டு அங்கிருந்து நழுவியுள்ளார்.
அவர் வெளியேறிய ஒருமணி நேரத்தில் அடுத்தடுத்து 2 குண்டுகள் வெடித்தன. இது தொடர்பான சி.சி.டி.வி. காட்சிகள், புகைப்படங்களை கொண்டு சந்தேக நபர் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ஹோட்டலில் சந்தேக நபருடன் பேசிய ஒருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.