சென்னை மெட்ரோ இரயில்களில், கடந்த பிப்ரவரி மாதத்தில் 86 லட்சத்து 15 ஆயிரம் பயணிகள் பயணம் செய்துள்ளதாக, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கும், மெட்ரோ ரயில் பயணிகளுக்கும் போக்குவரத்து வசதியை அளித்து வருவதோடு பாதுகாப்பான வசதியை ஏற்படுத்துகிறது.
அந்த வகையில், கடந்த ஜனவரி மாதத்தை விட பிப்ரவரி மாதத்தில் 1 லட்சத்து 51 ஆயிரத்து 624 பயணிகள் மெட்ரோ இரயிலில் அதிகமாக பயணித்துள்ளதாகவும், இந்த பயணிகளின் எண்ணிக்கை மெட்ரோ இரயில் சேவை தொடங்கியதில் இருந்து இதுநாள் வரையிலான எண்ணிக்கையில் இதுவே அதிக எண்ணிக்கை என்றும் மெட்ரோ இரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, கடந்த ஜனவரி மாதம் 1-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை, மொத்தம் 84 லட்சத்து 63 ஆயிரத்து 384 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர்.
கடந்த பிப்ரவரி மாதம் 1-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரை, மொத்தம் 86 லட்சத்து 15 ஆயிரத்து 8 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர். அதிகபட்சமாக, கடந்த பிப்ரவரி 9-ஆம் தேதி 3 லட்சத்து 26 ஆயிரத்து 786 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர்.
கடந்த பிப்ரவரி மாதத்தில், க்யுஆர் குறியீடு (QR Code) பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 35 லட்சத்து 5 ஆயிரத்து 644 பயணிகளும், பயண அட்டைகளை பயன்படுத்தி 38 லட்சத்து 94 ஆயிரத்து 639 பயணிகளும், டோக்கன்களை பயன்படுத்தி 28 ஆயிரத்து 640 பயணிகள், குழு பயணச்சீட்டு முறையை பயன்படுத்தி 5 ஆயிரத்து 959 பயணிகள் மற்றும் சிங்கார சென்னை அட்டையை பயன்படுத்தி 11 லட்சத்து 80 ஆயிரத்து 126 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.