பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவையின் நியமனக் குழு (ஏசிசி) மத்திய அரசின் பல்வேறு துறைகளில் 3 இணைச் செயலாளர்கள் மற்றும் 22 இயக்குநர்கள்,துணைச் செயலாளர்களை நியமிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2018 ம் ஆண்டு முதல் திறமையாளர்களை அரசில் இணைக்கும் நோக்கத்தில் ‛லேட்டரல் என்ட்ரி’ முறையில் தனியார் துறை நிபுணர்களை இணைச் செயலர், துணை செயலர் மற்றும் இயக்குநர் பதவிகளில், மத்திய அரசு பணியமர்த்தி வருகிறது.இதன் மூலம் அவர்களும் அரசில் ஒரு அங்கமாக மாறுவதுடன், அரசின் கொள்கை முடிவுகளிலும் ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றனர்.
பிரதமர் மோடி அரசாங்கத்தின் லட்சியத் திட்டத்தின் ஒரு பகுதியாக இருபத்தைந்து தனியார் துறை வல்லுநர்கள் விரைவில் முக்கிய பதவிகளில் சேருவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
பொதுவாக, இணைச் செயலாளர்கள், இயக்குநர்கள் மற்றும் துணைச் செயலாளர்கள் பதவிகளை அகில இந்திய சேவைகள் – இந்திய நிர்வாக சேவை (IAS), இந்திய காவல் சேவை (IPS) மற்றும் இந்திய வனப் பணி உள்ளிட்டவை மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
இந்த முயற்சி புதிய திறமை மற்றும் முன்னோக்கை அரசாங்கத்தில் கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
2021 அக்டோபரில், மத்திய அரசின் பல்வேறு துறைகளில் இணைச் செயலாளர்கள் (3), இயக்குநர்கள் (19), மற்றும் துணைச் செயலாளர்கள் (9) என 31 பேரை நியமனம் செய்ய ஆணையம் மீண்டும் பரிந்துரை செய்தது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
10 இணைச் செயலாளர்கள் மற்றும் 28 இயக்குநர்கள்,துணைச் செயலாளர்கள் உட்பட மொத்தம் 38 தனியார் துறை வல்லுநர்கள் இதுவரை அரசாங்கத்தில் இணைந்துள்ளனர்.
தற்போது, 8 இணைச் செயலாளர்கள், 16 இயக்குநர்கள் மற்றும் ஒன்பது துணைச் செயலாளர்கள் உட்பட 33 நிபுணர்கள் முக்கிய அரசுத் துறைகளில் பணிபுரிகின்றனர். மேலும் இரண்டு இணைச் செயலாளர்கள் தங்கள் முழு மூன்றாண்டு பதவிக்காலத்தையும் முடித்துள்ளனர்.