பிரதமர் வருகைக்கு பின் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என பாஜக மூத்த தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் அதன் தலைவர் ஜி.கே வாசனை தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பேச்சுவார்த்தைக்காக பாஜகவின் தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவில் இடம் பெற்றுள்ள பொன் ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன் ஆகியோர் சந்தித்தனர்.
பின் செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே வாசன்,
தமிழக பாஜகவின் தேர்தல் குழுவில் இடம் பெற்றிருக்கும் பொன் ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன் ஆகியோர் என்னையும் மாநில நிர்வாகிகள் மாவட்ட தலைவர்களலயும் சந்தித்து பேசினார்கள்.
முதல் சந்திப்பே ஆக்கப்பூர்வமான சந்திப்பாக அமைந்தது. தேர்தல் வெற்றி வியுகம் குறித்து பேசினோம்.
தொகுதி பங்கீடு குறித்து முறைப்படி பேச்சு வார்த்தை நடைபெறும் என என்னை சந்தித்த பாஜக தலைவர்கள் கூறியுள்ளார்கள். 4,5,6 ஆகிய தேதிகளில் தேர்தலில் போட்டியிட விரும்பும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் விருப்ப மனுக்களை அளிக்கலாம்.
இந்தியாவில் பாஜகவின் வெற்றி வாய்ப்பு மத்திய அரசின் சாதனைகள் மூலம் நிகழ இருக்கிறது. நாட்டின் நலன் கருதி தேசப்பற்றோடு கூடிய கட்சிகள் உடன் கூட்டணியில் இடம் பெற வேண்டும் என்பது எங்களது எண்ணம்.
நாட்டின் பொருளாதார வளர்ச்சி தொடரும் வகையில் மாநில கட்சிகள் செயல்பட வேண்டும்.
ஜிடிபி 8.4 என செய்தி வெளி வந்திருப்பது அனைத் துறைகளுக்கும் மகிழ்ச்சி அளிக்க கூடியது. அது இன்னும் தொடரும். இண்டி கூட்டணி முரண்பாட்டின் மொத்த உருவமாக இருக்கிறது. அதன் மீதான மக்களின் நம்பிக்கை குறைந்து கொண்டே செல்கிறது. தமிழகத்தில் பொதை பொருள்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளது.
போதை பொருளை தடுக்க முடியாத அரசுக்கு மக்கள் தேர்தலில் பாடம் புகட்ட வேண்டும். இரும்பு கரம் கொண்டு தவறு செய்பவர்களை அடக்க வேண்டும். மாநில கட்சியாக இருந்தாலும் தேசிய பார்வை கொண்ட கட்சி தமிழ் மாநில காங்கிரஸ்.
தேச பற்று மிக்கவர்கள் பாஜகவை ஆட்சிக்கு கொண்டு வர வேண்டும். பாஜக ஆட்சிக்கு வருவதன் மூலம் நாட்டின் பொருளாதாரம் உயரும் என்பது தமாகா கருத்து. வரும் 4 – ந் தேதி பிரதமர் கூட்டத்தில் தமாகாவினர் கலந்து கொண்டுள்ள உள்ளனர். 39 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் எனத் தெரிவித்தாா்.
பேட்டியின் முடிவில் எத்தனை தொகுதிகள் பாஜகவிடம் கேட்க போகிறீர்கள் என்று பாஜகவின் கேள்விக்கு, எங்களுக்கு விருப்பமான தொகுதிகளின் எண்ணிக்கை 41, எனது ஆசை பாண்டிச்சேரியையும் தாண்டி இருக்கிறது என நகைச்சுவையாக தெரிவித்தார்.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய பொன் ராதாகிருஷ்ணன்,
வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அமைத்து பிரதமர் மோடி பிரதமராக வருவதற்கு தமிழகம் அதிக பங்களித்தாக இருக்க வேண்டும்.
கூட்டணி பற்றிய சுமுகமான முடிவு கூடிய விரைவில் வெளியாகும். பிரதமர் வருகைக்கு பின் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும். தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் தேச பற்றுடன் தான் உள்ளது எனத் தெரிவித்தார்.
தமிழ் மாநில காங்கிரஸ் உடன் இணைந்து பயணம் செய்வது பாஜகவிற்கு மிகப்பெரிய வெற்றியைப் தரும் எனத் தெரிவித்தார்.