பெங்களூரு ராமேஸ்வரம் ஹோட்டலில் குண்டு வெடிப்பு நிகழ்ந்த சம்பவ இடத்தில் அந்நகர போலீசார் இன்று விசாரணை மேற்கொண்டனர்.
கர்நாடக மாநிலம் பெங்களூரூ ஒயிட்பீல்டு அருகே ராமேஸ்வரம் கபே ஹோட்டல் செயல்பட்டு வருகிறது.இந்த ஹோட்டலில் மார்ச் ஒன்றாம் தேதி பயங்கர சத்தத்துடன் அடுத்தடுத்து இரு குண்டுகள் வெடித்தன. இதில் அங்கு உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்த 10 பேர் காயம் அடைந்தனர்.
இதனைத்தொடர்ந்து சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில் குண்டு வைத்ததாக சந்தேகிக்கப்படும் நபரின் வீடியோ வெளியாகியுள்ளது. அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்நிலையில், சம்பவ இடத்தில் பெங்களூரு போலீசார் இன்று விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே ராமேஸ்வரம் ஹோட்டல் மார்ச் 8ஆம் தேதி மீண்டும் திறக்கப்படவுள்ளதாக தலைமை செயல் அதிகாரி ராகவேந்திரா ராவ் தெரிவித்துள்ளார்.
குண்டு வெடிப்பில் காயம் அடைந்த வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு என்றும் துணையாக நிற்போம் என்றும் அவர் கூறினார். இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் சட்டத்தின் முன் நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.