பாகிஸ்தானின் அணுசக்தி மற்றும் ஏவுகணை திட்டங்களுக்கு உதவும் நோக்கில், சீனாவில் இருந்து பாகிஸ்தானுக்கு சென்ற கப்பலை இந்திய பாதுகாப்பு ஏஜென்சிகள், மும்பை துறைமுகத்தில் தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டு வருகின்றன.
சீனாவில் இருந்து பாகிஸ்தானுக்கு ராணுவ பயன்பாட்டு பொருட்கள் அனுப்பப்பட்ட சரக்குகளை இந்திய துறைமுக அதிகாரிகள் பறிமுதல் செய்யும் சம்பவங்கள் பலமுறை நடந்துள்ளன. அந்த வகையில், சீனாவில் இருந்து பாகிஸ்தானுக்கு அணு ஆயுதம் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணை தயாரிக்க பயன்படுத்தும் இரட்டை பயன்பாட்டு பொருட்கள் சரக்கு கப்பலில் அனுப்பப்பட்டிருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது.
இதன் அடிப்படையில் மும்பை நவா ஷேவா துறைமுகத்தில் சுங்க அதிகாரிகள் மால்டா நாட்டு கொடியுடன் கடந்த மாதம் 23ம் தேதி வந்த சரக்கு கப்பலை தடுத்து நிறுத்தி ஆய்வு செய்தனர். அதில், இத்தாலி நிறுவனத்தின் தயாரிப்பான கம்ப்யூட்டர் நியூமரிகல் கன்ட்ரோல் மெஷின் (சிஎன்சி) இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பொதுவாக இந்த கருவியை வடகொரியா தனது அணு ஆயுத திட்டங்களில் பயன்படுத்துவது வழக்கம்.
எனவே, பாகிஸ்தானில் அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை தயாரிப்பு திட்டங்களுக்காக இந்த சரக்குகள் சீன நிறுவனத்தில் இருந்து கராச்சிக்கு அனுப்பப்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகித்துள்ளனர். சிஎன்சி கருவிகள், சர்வதேச ஆயுத கட்டுப்பாட்டு திட்டத்தின் கீழ் வருபவை. எனவே, 22,180 கிலோ எடையுள்ள இந்த சரக்குகளை சுங்கத்துறை பறிமுதல் செய்துள்ளது.
மும்பை துறைமுகத்தில் முடக்கப்பட்ட சீன – பாகிஸ்தான் கப்பலில் சரக்குகளை ஆய்வு செய்து, அதில் பாகிஸ்தானின் அணுசக்தி திட்டத்துக்கான பயன்பாட்டை இந்தியாவின் டிஆர்டிஓ குழு சரிபார்த்தது.
’ஷாங்காய் ஜேஎக்ஸ்இ குளோபல் லாஜிஸ்டிக்ஸ் லிமிடெட்’ என்ற சீன நிறுவனத்திடமிருந்து, பாகிஸ்தானின் ‘பாகிஸ்தான் விங்ஸ் பிரைவேட் லிமிடெட்’ என்ற முகவரி சரக்கினை கொண்டு செல்வதாக ஆவணங்கள் தெரிவிக்கின்றன. எனினும் இந்திய ஏஜென்சிகளின் சோதனையில் இந்த சரக்கு பாகிஸ்தானில் உள்ள ’காஸ்மோஸ் இன்ஜினியரிங்’ நிறுவனத்திற்காக செல்வது கண்டறியப்பட்டது.
சர்வதேசளவில் கண்காணிப்பு பட்டியலில் இருக்கும் இந்த் காஸ்மோஸ் இன்ஜினியரிங் நிறுவனம், ஐரோப்பா மற்றும் அமெரிக்காவிலிருந்து தடைசெய்யப்பட்ட பொருட்களைப் பெறுவதற்கு, அது குறித்தான கண்டறிதலைத் தவிர்ப்பதற்காக அடையாளங்களை மறைத்து, சீனாவை ஒரு வழித்தடமாக பயன்படுத்தியதை ஏற்கனவே இந்தியா கண்டறிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.