ஆந்திர ரயில் விபத்திற்கு ஓட்டுநர்கள் செல்போனில் கிரிக்கெட் பார்த்ததே காரணம் என மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளளார்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஆந்திரா மாநிலம் விஜயநகரம் கண்டகபள்ளி அருகே, விசாகப்பட்டினத்தில் இருந்து ராயகடா சென்ற பயணியர் ரயிலும், அதே வழித்தடத்தில் வந்த பாலசா பயணியர் ரயிலும், மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், லோகோ பைலட் மற்றும் கோ-பைலட் கவனக்குறைவே விபத்திற்கு காரணம் என தெரிவித்தார்.இருவரும் செல்போனில் கிரிக்கெட் பார்த்ததால் விபத்து ஏற்பட்டதாகவும் அவர் கூறினார்.
இதுபோன்ற கவனச்சிதறல்களைக் கண்டறியக்கூடிய அமைப்புகளை நிறுவி வருவதாகவும், ஒட்டுநர்கள் ரயிலை இயக்குவதில் முழு கவனம் செலுத்துவதை உறுதி செய்கிறோம் என்று அவர் கூறினார்.
நாங்கள் பாதுகாப்பில் தொடர்ந்து கவனம் செலுத்துவோம். ஒவ்வொரு சம்பவத்திற்கும் மூல காரணத்தை கண்டறிய முயற்சிக்கிறோம், அது மீண்டும் நிகழாமல் இருக்க நாங்கள் ஒரு தீர்வைக் கொண்டு வருகிறோம் என்றும் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.