ஹைதராபாத் மக்களவை தொகுதியில் AIMIM கட்சி தலைவர் ஓவைசிக்கு எதிராக பாஜக சார்பில் மாதவி லதாவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
மக்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதல் பட்டியலை பாரதிய ஜனதா கட்சி வெளியிட்டது. அதில் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் தொகுதியில் விரிஞ்சி மருத்துவமனை தலைவர் கொம்பெல்லா மாதவி லதாவு போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மாதவி லதா, ஹைதராபாத்தின் சமூக-அரசியல் நிலப்பரப்பில் ஒரு முக்கிய நபராக உள்ளார். நிஜாம் கல்லூரியில் இளங்கலைப் பட்டம் பெற்ற இவர், கோட்டி மகளிர் கல்லூரியில் அரசியல் அறிவியலில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார்.
ஹைதராபாத்தில் உள்ள பழைய நகரப் பகுதியில் கலாச்சார பாதுகாப்பு மற்றும் சமூக மேம்பாடு தொடர்பான பணிகளில் அவர் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில்,தமக்கு வாய்ப்பு அளித்த பாஜக தலைமைக்கு மாதவி லதா நன்றி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில், ஹைதராபாத் மக்களவை தொகுதியில் தூய்மை, கல்வி, சுகாதார வசதிகள் எதுவும் இல்லை. மதரஸாக்களில் குழந்தைகளுக்கு உணவு கிடைப்பதில்லை. கோவில்கள் மற்றும் இந்துக்களின் வீடுகள் சட்ட விரோதமாக ஆக்கிரமிக்கப்படுகின்றன.
முஸ்லிம் குழந்தைகளுக்கு கல்வி, வீடு, எதிர்காலம் இல்லை. தற்போதைய எம்பி தொகுதி மக்களுக்காக எதுவும் செய்யவில்லை. ஹைதராபாத் நகரின் மையத்தில் இருந்தாலும் அங்கே வறுமை இருக்கிறது என தெரிவித்துள்ளார்.
இஸ்லாமிய வாக்காளர்கள் நிறைந்த ஹைதராபாத் தொகுதியில் ஓவைசி தற்போது எம்பியாக உள்ளார். கடந்த 2004ஆம் ஆண்டு முதல் இந்த தொகுதியில் எம்பியாக உள்ள அவர், 2024 தேர்தலிலும் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் பகவந்த் ராவை சுமார் 2, 82,000 வாக்குகள் வித்தியாசத்தில் ஓவைசி வீழ்த்தினார். ஆனால் தற்போது தேர்தல் களம் மாறியுள்ளது.
அவர் பெரிதாக தொகுதிக்கு எந்த நலத்திட்டங்களையும் செய்வதில்லை என்று குற்றச்சாட்டு வாக்காளர்கள் மத்தியில் உள்ளது. எனவே இந்த தேர்தலில் பாஜக வேட்பாளருக்கு வெற்றி வாய்ப்பு அதிக அளவில் உள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகிறது.