பாகிஸ்தானில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, ஆப்கானிஸ்தானை ஒட்டியுள்ள பாகிஸ்தானின் கைபர் பாக்துன்க்வா, பலுசிஸ்தான் மாகாணங்களில் கனமழை வெளுத்து வாங்குகிறது.
தொடர்ந்து, பெய்து வரும் கனமழையின் காரணமாக, பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால், சில சாலைகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள குவாடரில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தாழ்வான பகுதியில் உள்ள குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. அப்பகுதியில் இருந்த மக்களை அதிகாரிகள் படகுகள் மூலம் பாதுகாப்பாக வெறியேற்றினர். தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் நடைபெறுகின்றன.
நூற்றுக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். சாலைகளில் குளம் போல் வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது. பல்வேறு பகுதிகளில் மின்சாரம் மற்றும் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு நாட்களாக பெய்த கனமழையால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கைபர் பாக்துன்க்வா மாகாணத்தில் வியாழக்கிழமை இரவு தொடங்கி 48 மணி நேரத்தில், மழை மற்றும் நிலச்சரிவு காரணமாக, 27 பேர் உயிரிழந்ததாகவும், 37 பேர் காயமடைந்ததாகவும் மாகாண பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும், தென்மேற்கு பலுசிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தலா 5 பேர் உயிரிழந்தனர்.