மாமல்லபுரம் கடலில் ராட்சத அலையில் அடித்துச் செல்லப்பட்ட ஆந்திராவைச் சேர்ந்த கல்லூரி மாணவர்களில், 4 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
ஆந்திராவைச் சேர்ந்த 40 கல்லூரி மாணவர்கள் இரண்டு குழுக்களாக நேற்று மாமல்லபுரத்துக்கு சுற்றுலா வந்தனர். அவர்கள் மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களை பார்த்து ரசித்தனர்.
பின்னர், 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கடலில் இறங்கி குளித்தனர். அப்போது, எதிர்பாராத விதமாக வந்த ராட்சத அலையில் சிக்கி, 10 மாணவர்கள் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டனர். இதை பார்த்த சக மாணவர்கள் கூச்சலிட்டனர்.
உடனே அங்கிருந்த மீனவர்கள் சிலர், கடல் அலையில் சிக்கி உயிருக்கு போராடிய 5 மாணவர்களை பத்திரமாக மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். அப்போது, ஒரு மாணவனின் உடல் இறந்த நிலையில், கரை ஒதுங்கியது. தொடர்ந்து, மாணவர்களை தேடும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.
இந்நிலையில், 3 பேரின் உடல்கள் இறந்த நிலையில் இன்று மீட்கப்பட்டுள்ளது. இன்னும் ஒரு மாணவரின் உடலை தேடும் பணி நடந்து வருகிறது.