குழந்தைகளை பாதிக்கும் போலியோ வைரஸ் பாதிப்பை தடுக்க நேற்று தமிழகம் முழுவதும் 43 ஆயிரத்து 51 மையங்களில், 56 லட்சத்து 34 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.
தமிழகம் முழுவதும் நேற்று போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது. அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்கள் என மொத்தம் 43 ஆயிரத்து 51 இடங்களில் முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டு, குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.
இதேபோல், குழந்தைகளின் வசதிக்காக இன்று முக்கிய பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், சோதனைச்சாவடிகள், விமான நிலையங்களில் பயண வழி மையங்கள் மூலம் சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மேலும், நடமாடும் குழுக்கள் மூலமாக தொலைதூரம் மற்றும் எளிதில் செல்ல முடியாத பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.
5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. சொட்டு மருந்து மையங்களில், 2 லட்சத்திற்கும் மேற்பட்ட சுகாதார பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபட்டனர். தமிழகத்தில் மொத்தமாக 56 லட்சத்து 34 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.