அடிப்படை உரிமைகளை துஷ்பிரயோகம் செய்துவிட்டு, தற்போது பாதுகாப்புக்கோரி உச்ச நீதிமன்றம் வந்துள்ளீர்களா என அமைச்சர் உதயநிதிக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
தமிழக முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கம் சார்பில் சென்னையில் சனாதன ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சிலவற்றை நாம் ஒழிக்கத்தான் வேண்டும். எதிர்க்க முடியாது. கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது. ஒழித்துக்கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனமும் என தெரிவித்தார்.
அமைச்சர் உதயநிதியின் பேச்சுக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது. அவருக்கு பல்வேறு மாநிலங்களில் வழக்குகள் தொடரப்பட்டன.இந்த அனைத்து வழக்குகளையும் ஒன்றாக இணைத்து விசாரிக்கக் கோரி அமைச்சர் உதயநிதி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மூத்த அபிஷேக் மனு சிங்வியிடம், அமைச்சரான உதயநிதி தான் பேசும் போது ஏற்படும் விளைவுகளை எண்ணிப்பார்க்க வேண்டும் என்றும், அவர் ஒன்றும் சமானியர் அல்ல என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
கருத்து சுதந்திரம் என்ற பெயரில் அரசியல் அமைப்பு சட்டத்தை துஷ்பிரயோகம் செய்து பேசியுள்ளார். இதனை ஒரு போதும் ஏற்க முடியாது என தெரிவித்தனர். வழக்கு விசாரணை அடுத்த வாரம் வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்தனர்.