பெங்களூரு ஹோட்டல் குண்டுவெடிப்பு வழக்கில் கர்நாடக முதலமைச்சர் மெத்தனப்போக்கை கடைபிடித்ததாக அம்மாநில முன்னாள் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
பெங்களூரு ஒயிட்ஃபீல்ட் பகுதியில் உள்ள ராமேஸ்வரம் உணவகத்தில் மார்ச் 1 ஆம் தேதி குண்டுவெடிப்பு நடத்தப்பட்டது. இதில் 10 பேர் காயம் அடைந்தனர். இதுதொடர்பாக பெங்களூரூ போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அதேநேரத்தில் என்ஐஏ அதிகாரிகளும் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணைக்கு மாற்றி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து என்ஐஏ அதிகாரிகள் மீண்டும் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.
இதுதொடர்பாக கர்நாடக முன்னாள் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் தீவிரவாத தொடர்பு இருந்தால் வழக்கு பதிவு செய்ய தேசிய புலனாய்வு அமைக்கு உரிமை உள்ளது. எனவே முதற்கட்ட விசாரணையில் தீவிரவாத தொடர்பு இருக்கலாம் என கண்டறியப்பட்டுள்ளது.
ஆனால் இந்த சம்பவத்தை கர்நாடகா மாநில அரசு மிக இலகுவாக எடுத்துக்கொண்டது. குற்றவாளியை ஊரை விட்டு, மாநிலத்தை விட்டு, வெளியூர் செல்ல நிறைய அவகாசம் கொடுத்துள்ளார்கள், இதன் மூலம் முதலமைச்சர் சித்தராமையாவின் மெத்தனப்போக்கு தெரியவந்துள்ளதாக பொம்மை கூறினார்.