திருச்சி திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி துவாக்குடியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாபெரும் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. பாஜக திருச்சி பாராளுமன்ற தொகுதி இணை அமைப்பாளர் டாக்டர் ஆர்.ஜி. ஆனந்த் குத்து விளக்கேற்றி முகாமை தொடங்கி வைத்தார்.
திருச்சி நாடாளுமன்ற தொகுதி திருவெறும்பூர் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட துவாக்குடியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் பிரமாண்ட மருத்துவ முகாம் திருச்சி பாராளுமன்ற இணை அமைப்பாளரும், மாநில செயற்குழு உறுப்பினருமான – டாக்டர் ஆர்.ஜி. ஆனந்த் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. இதில், 12 டாக்டர்கள், ஏராளமான செவிலியர்கள் பங்கேற்றனர்.
இதில், அக்கம் பக்கம் பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பயனாளிகளுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது. மேலும், சம்பந்தப்பட்டவர்களுக்கு மருந்து மாத்திரைகள் டானிக் வகைகள் மற்றும் பிசியோதெரபி கருவிகள் இலவசமாக வழங்கப்பட்டன.
உள்நோயாளியாக மருத்துவமனையில் தங்கி அவசர சிகிச்சை பெறவேண்டிய கட்டாயத்தில் இருந்த பயனாளிகள் 8 பேருக்கு டாக்டர் ஆர்.ஜி.ஆனந்த் தனது சொந்த செலவில் தனியார் மருத்துவமனையில் சேர்ப்பதற்கு ஏற்பாடு செய்தார். பாரதிய ஜனதா கட்சியின் இந்த புதிய அணுகு முறையை அப்பகுதி மக்கள் மிகவும் மனதார பாராட்டினர்.
மருத்துவ முகாம் குறித்து டாக்டர் ஆர்.ஜி.ஆனந்த் கூறுகையில், மக்கள் சேவையே மகேசன் சேவை என்கிற மாண்புமிகு பிரதமர் மோடியின் கொள்கையின்படியும், பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் ஆலோசனையின் பேரிலும், மருத்துவ முகாம் தமிழ்நாடு முழுவதும் கிராமம் வாரியாகத் தொடர்ந்து நடைபெறும் என்று உறுதிபடத் தெரிவித்தார்.
அப்போது, திருவெறும்பூர் பா.ஜ.க மண்டல் தலைவர் விஜய் ஆனந்த் தலைமையில், பாஜக நிர்வாகிகள், கிளைத் தலைவர்கள் மற்றும் பூத்கமிட்டி உறுப்பினர்கள் உள்ளிட்டோர் திரளாகக் கலந்து கொண்டு முகாம் வெற்றி பெற உறுதுணையாக இருந்தனர்.
பொது மக்களுக்கு மிகவும் பயனுள்ள மருத்துவ முகாம் நடத்திய பாஜகவினருக்கும், இதற்கு காரணமாக இருந்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கும், மக்கள் நலனில் எப்போதும் அக்கரை கொண்டுள்ள பிரதமர் மோடிக்கும் அப்பகுதி மக்கள் தங்களது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்தனர்.