ஜம்மு காஷ்மீர் மாநிலம் புட்காம் அருகே உடலை உறையவைக்கும் கடும் குளிருக்கு மத்தியில், சிறுவர்கள் தற்காப்புப் பயிற்சி செய்யும் வீடியோ, தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
காஷ்மீர், உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசம் போன்ற மலைப்பிராந்திய மாநிலங்களில் பனிப்பொழிவு மற்றும் குளிரின் தாக்கம் அதிகரித்துள்ளது. குறிப்பாக, காஷ்மீரில் பனிப்பொழிவின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது.
இந்தியாவில் குளிர்கால சுற்றுலா என்று வரும்போது, அதில் முக்கியமானது காஷ்மீர் தான். காரணம் காஷ்மீரின் பெரும்பாலான சுற்றுலா தலங்களில், திரும்பும் திசையெங்கும் மலைகள், வீடுகள், சாலைகள், வாகனங்கள் உட்பட அனைத்தும் வெண்போர்வை போர்த்தியது போல் பனி படர்ந்து ரம்மியமாக காட்சியளிக்கும்.
தற்போது, வெண்பனி போர்த்திய சொர்க்கம் போல் காட்சியளிக்கும், காஷ்மீரின் அழகை பார்த்து ரசிப்பதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். நாளுநாளுக்கு நாள் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலம் புட்காம் அருகே கடும் பனிப்பொழிவு மற்றும் குளிருக்கு நடுவே தற்காப்பு கலை பயிற்சி முகாம் நடைபெற்றது. உடலை உறைய வைக்கும் கடும் குளிருக்கு மத்தியில், சிறுவர்கள் தற்காப்புப் பயிற்சிகளை செய்தனர். இந்த முகாம் காஷ்மீர் பள்ளத்தாக்கில் தற்காப்புக் கலையை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டது.
கடும் குளிருக்கு மத்தியில், சிறுவர்கள் தற்காப்புப் பயிற்சி செய்யும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.