ஆதித்யா எல்-1 செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்ட அதே நாளில், தனக்கு புற்றுநோய் கண்டறியப்பட்டதாகவும், தற்போது புற்றுநோயில் இருந்து மீண்டுள்ளதாகவும் இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.
இஸ்ரோ தலைவர் சோம்நாத்துக்கு கடந்த செப்டம்பர் 2-ஆம் தேதி புற்றுநோய் பாதிப்பு கண்டறியப்பட்டது. ஆதித்யா எல்-1 விண்கலம் ஏவப்பட்ட அதே நாளில், புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர், கீமோதெரபி மூலம் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது.
இதுகுறித்து இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறியதாவது, “சந்திரயான்-3 விண்கலம் ஏவுதலின் போது, சில உடல்நலப் பிரச்னைகள் எனக்கு இருந்தன. இருப்பினும், அந்த நேரத்தில் எனக்கு தெளிவான புரிதல் இல்லை.
ஆதித்யா எல்-1 செலுத்தப்பட்ட நாளில், எனக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. பின்னர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தேன். கீமோதெரபி சிகிச்சைக்கு பின், குணமடைந்துள்ளேன். தற்போது, சிகிச்சை பெற்று வருகிறேன் என்று தெரிவித்துள்ளார்.